கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதேசமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கோவில்களில் வைக்கப்படும் சிலைகளைக் கரைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி இல்லை என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
தெரிவித்துள்ளார்.
தனி நபர்கள் தங்களின் சிலைகளை கோயில்களில் வைத்தால் சிலைகளை அறநிலையத்துறை மூலம் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
பூஜை பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
சென்னை முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுவர். வழிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவு மக்கள் குவிந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாட பூஜை பொருட்கள் வாங்கும் மக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
பழங்கள், பூக்கள் விற்பனை செய்யப்படும் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
விநாயகருக்கு அதிகம் வைத்து வழிபடப்படும் ஒரு கட்டு அருகம்புல் விலை ரூ.40 க்கு விற்கப்படுகிறது. வாழைத்தார், பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
தென் தமிழகத்தில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் முக்கியமானது.
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் மக்கள் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாட்டுத் தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு பூக்கள் விற்பனையாகியுள்ளன.
மதுரை மல்லிகை காலையில் கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. 1 கிலோ ரோஜா ரூ.300, பிச்சிப்பூ ரூ.80, முல்லைப்பூ ரூ.80, செவ்வந்தி ரூ.150, கோழிக்கொண்டைப்பூ ரூ.150 என விற்பனையாகிறது. மொத்தம் 50 டன் பூக்கள் விற்பனைக்கு வந்தது. ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள காட்டன் மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
இங்கு சேலம், நாமக்கல், சத்தியமங்கலம் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். பூ மார்க்கெட்டில் மல்லி விலை கிலோ ரூ.200-க்கும், முல்லை கிலோ ரூ.150க்கும் விற்பனையான நிலையில் அமாவாசை முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
மல்லி கிலோ ரூ.200 ல் இருந்து மும்மடங்காக ரூ.1000க்கு விற்பனையாகிறது. முல்லை, ரூ.150-ல் இருந்து ரூ.450 க்கும், கடந்த வாரம் ரூ.100 இருந்த ஒரு கிலோ அரளி, ரூ.250 க்கும், வரத்து குறைவால் கனகாம்பரம் கிலோ ரூ.900 க்கும், செவ்வந்தி ரூ.200 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் தற்போது பண்டிகை நாளையொட்டி அதிகமாக ஒரே இடத்தில் கூடுவதுடன் மாஸ்க் அணியாமலும் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
