தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் துறை வாரியான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துறை சார்ந்த 18 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சிட்கோ மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி ஏற்படுத்திட, திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், மற்றும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 394 ஏக்கர் பரப்பளவில் ரூ.218.22 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன்மூலம் சுமார் 7000 நபர்கள் வேலைவாய்ப்பினை பெறுவர்.
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (நீட்ஸ்) பயன்பெற தகுதியான கல்வித்தகுதியை பன்னிரெண்டாம் வகுப்பு என தளர்த்தியும், தனிநபர் முதலீட்டு மானியத்தை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
இந்த திட்டத்தின்கீழ் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில்முனைவோருக்கு 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் கடன் உதவியுடன் ரூ.50.06 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
சிட்கோ மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடியில் 19 ஏக்கரில் ரூ.23 கோடி மதிப்பீட்டில், சிற்பக் கலைஞர்களின் மேம்பாட்டிற்காக சிற்பக் கலைஞர் தொழிற்பூங்கா சுமார் 100 சிற்பக் கலைஞர்கள் மற்றும் இதர 1000 நபர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும்.
கொசிமா மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கரில் ரூ.18.13 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.9.06 கோடி அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன்மூலம் சுமார் 1000 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.
