சிஏஏ., என்பிஆர்., என்ஆர்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக :
தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய பாஜக அரசு மதத்தின் அடிப்படையில்
மக்களை பிளவுபடுத்தும் வகையில் குடியுரிமைதிருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த முயற்சிக்கிறது.
இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்புகள் உள்பட அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றுபட்டு திரளாக வீதிக்கு வந்துஅமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்ட மானது, சிறுபான்மை மக்களை மட்டும் பாதிக்கக் கூடியது அல்ல. ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பாதிக்கும். இந்திய அரசியல் சாச னம் இந்திய மக்களுக்கு குடியுரி மை வழங்கியுள்ளது.
ஆனால், குடியுரிமை குறித்து தேவையற்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.
எனவே, அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தில்லி வன்முறைவெறியாட்டம் என்பது ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த வன்முறையால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிஏஏ-க்கு எதிராக முதன் முதலாக கேரள அரசு தீர்மானம் நிறை வேற்றியது.
ஆனால் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற தயாராக இல்லை. பாஜக ஆதரவுடன் ஆட்சி நடைபெறும் பீகாரிலும் சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இதை அங்குள்ள பாஜகவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தேர்தல் அறிக்கையில் சிஏஏ, என்பிஆர்., என்ஆர்சி ஆகிய மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவோம் என தெரிவித்திருந்தது.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை கடந்து, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரும் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 13-ம் தேதியுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடையவுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்திலும் மத்திய அரசின் சிஏஏ, என்பிஆர்., என்ஆர்சி., எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் சிறுபான்மை மக்களை ஏமாற்றிவிட்டது.
இதன் காரணமாக தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு சிறுபான்மை மக்கள் சரியான பாடத்தை கற்பித்தனர்.
அந்த வகையில், தற்போதைய திமுக அரசும் இனியும் காலதாமதம் செய்யாமல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவும்,தேசிய மக்கள் தொகை பதிவேடுமற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் எனவும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
