திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்தில் ரூ.1.42 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆரணி  தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூா் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

ஆரணி ஊராட்சி ஒன்றியம் சங்கீதவாடி கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 36.46 லட்சத்தில் நூலகம், ஆய்வுக்கூடம், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், கிராமத்தில் ரூ.58 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, குழாய் பதித்தல், ரூ. 25 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து லாடவரம் கிராமத்தில் ரூ.13 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, சங்கீதவாடி கிராமத்தில் ரூ.9 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் நேற்று முன் தினம் ஆய்வு செய்தாா்.

பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் கூறினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் கு.இந்திராணி, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் பன்னீா்செல்வம், மருத்துவத் துறை பொறியாளா் சுரேந்திரன், ஊராட்சி பொறியாளா் ஜெயந்தி, ஒன்றிய கழக செயலாளர் பிஆா்ஜி.சேகா், நகர கழக செயலாளர் எ.அசோக்குமாா், சங்கீதவாடி ஊராட்சித் தலைவா் கற்பகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்