இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பேண விரும்புவதாக, தாலிபான் இயக்கத்தின் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 500 திட்டங்களை மேற்கொள்ள 3 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.22,000 கோடி) இந்தியா முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஷேர் முகமது அப்பாஸ் தெரிவித்து உள்ளதாவது:–

தெற்காசியாவில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. அந்நாட்டுடன் ஆப்கானிஸ்தானுக்கு உள்ள அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளுக்கு தாலிபான்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். அவற்றை தொடர்ந்து பேண விரும்புகிறோம்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த நிர்மாணிக்கப்பட்ட வான் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தான் வழியாக இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில், கடந்த 1980 ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளிநாட்டு ராணுவ வீரர் என்ற முறையில் ஷேர் முகமது அப்பாஸ் பயிற்சி பெற்றார்.

அவர் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் இணைந்த நிலையில், பின் அந்தப் பணியில் இருந்து விலகி தாலிபான்களுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ‘இந்த துணைக்கண்டத்திற்கு மிகவும் முக்கியமானது’ என்றும், தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ‘கலாச்சாரம்’, ‘பொருளாதாரம்’, ‘அரசியல்’ மற்றும் இந்தியாவுடனான ‘வர்த்தக உறவுகள்’ ‘கடந்த காலத்தைப் போல’ தொடர விரும்புவதாகவும் கூறியுள்ளது, இந்தியாவுக்கு ஒரு சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின், ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக இந்தியா உள்ளது.

அதன் அறிக்கையில் தாலிபான்கள் பற்றிய குறிப்பை ஒரு பத்தியில் இருந்து கைவிட்டது.

மேலும் ஆப்கானிஸ்தான் குழுக்கள் ‘ வேறு எந்த நாட்டிலும் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது’ என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வகுப்புகள் – தாலிபான்கள் கட்டுப்பாடு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் தங்களது கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் மாணவியர் தனித்தனி வகுப்பறைகளில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தாலிபான்களின் அடக்குமுறையால் ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்களும், அங்கு வசிக்கும் வெளிநாட்டினரும் வெளியேறி வருகின்றனர்.

இதனால் காபூல் விமான நிலையத்துக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

வரும் 31ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் என்பதால், புதிய அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் தாலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை நிர்வகிக்கும் அதிகாரிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முதல் அதிரடியாக, பல்கலைக்கழகங்களில் இருபாலரும் ஒன்றாக படிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

இஸ்லாமிய சட்டப்படி மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனி வகுப்பறைகளில் பாடம் நடத்தப்படும் என, கல்வித்துறையை கவனித்து வரும் சியார் கான் யாத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கந்தஹாரில், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ள தாலிபான்கள், பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்திருக்கின்றனர்.

ஆரம்ப காலத்தில் இருந்தே பாடகர்கள் மற்றும் ஓவியர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் தாலிபான்கள், அந்தாரப் மாகாணத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகர் ஃபாவத் அந்தாரபியை சுட்டுக் கொலை செய்தனர்.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், 2 தடகள வீரர்களும், 2 செய்தியாளர்களும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, காபூல் விமான நிலையத்தில் தாலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். காபூலில் கள நிலவரம் அபாயகரமாகவே உள்ளது என்றும், அங்குள்ள அமெரிக்க மக்கள் விமான நிலையத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்