ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர்.

காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏராளமானோர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் சிறப்பு விமானம் மூலம் காபூலில் உள்ளவர்களை மீட்டு வருகின்றன. காபூல் விமான நிலையத்துக்கு வெளியில் உள்ள பகுதிகள் முழுவதும் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளதால், விமான நிலையங்களுக்குள் பொதுமக்கள் நுழையாதபடி தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாத தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் தெரிவித்தார்.

இதேபோன்ற தகவலை பிரிட்டனும் வெளியிட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து கூடிய விரைவில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கூறியிருந்தார்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எதையும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 13 கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

மேலும், அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 18-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

பின்னர், சிறிது நேரத்தில் அபே கேட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள பேரோன் ஹோட்டல் அருகேயும் மற்றொரு குண்டு வெடித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது இதுவரையில் தெரியவில்லை. இதுகுறித்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரின் உதவியாளர் ஜோ கிர்பை, ‘பேரோன் ஹோட்டல் அருகில் மற்றொரு குண்டு வெடிப்பு நடைபெற்றதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்

. இதுகுறித்த கூடுதல் தகவல்களை விரைவில் தெரிவிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.