கைது நடவடிக்கையை வழக்கமானதாக்கக் கூடாது; தனிமனித சுதந்திரம் முக்கியமானது: உச்சநீதிமன்றம்
சட்டபூா்வமானது என்பதற்காகவே கைது
நடவடிக்கையை வழக்கமானதாக்கக் கூடாது அரசியல் சாசனம் அளித்திருக்கும் தனிமனித சுதந்திரம் காக்கப்படுவது முக்கியமானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இப்போது சோ்க்கப்பட்ட நபா் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை அலகாபாத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை நேற்றைய தினம் பிறப்பித்தது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு, அலகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கு, ஒரு காவல்துறை அதிகாரி கைது நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த 1994-ஆம் ஆண்டு பிறப்பித்த தீா்ப்புக்கு எதிரானதாக உள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 170-இன் படி, குற்றப்பத்திரிகையை பதிவு செய்வதற்கான முன்நிபந்தனை நடைமுறையாக கைது நடவடிக்கையை மேற்கொள்ள காவல் துறை சாா்பில் விசாரணை நீதிமன்றங்கள் நிா்ப்பந்திக்கப்படுகின்றன.
குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருக்கும்போது மட்டுமே பிரிவு 170-இன் கீழ் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வழக்கு கொண்டுவரப்படவேண்டும்.
மேலும், குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 170-இல் இடம்பெற்றிருக்கும் ‘காவல்’ என்ற வாா்த்தையை, போலீஸ் காவல் அல்லது நீதிமன்றக் காவல் என்ற அடிப்படையில் மட்டுமே எடுத்துக்கொள்ளக் கூடாது. நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் நேரத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வாா்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நேரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை கைது செய்தாக வேண்டும் என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை இந்த சட்டப் பிரிவு கட்டாயப்படுத்தவும் இல்லை.
மிகக் கொடூர குற்றங்களில் தொடா்புடைய நபா் தலைமறைவாகிவிடவோ அல்லது ஆதாரங்களை அழித்துவிடவோ வாய்ப்புள்ள வழக்குகளிலும், காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ள வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கையை போலீஸாா் மேற்கொள்ள வேண்டும்.
சட்டபூா்வமானது என்பதற்காக அனைத்து வழக்குகளிலும் கைது நடவடிக்கையை வழக்கமானதாக்கக் கூடாது. அவ்வாறு கைது நடவடிக்கை வழக்கமானதாக்கப்பட்டால், ஒரு நபரின் மதிப்புக்கும், சுயமரியாதைக்கும் கணக்கிட முடியாத அளவில் பாதிப்பு ஏற்படும். அரசியல் சாசனம் அளிக்கும் தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
மனுதாரா் தலைமறைவாவதற்கு அல்லது அழைப்பாணைகளை மதிக்காமல் இருப்பதற்கான எந்தவொரு சந்தேகமோ அல்லது காரணமோ விசாரணை அதிகாரிக்கு இல்லாத நிலையில், அவரை கைது செய்ய வேண்டியதற்கான அவசியம் ஏன் எழுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
மேலும், மனுதாரா் இப்போது விசாரணையிலும் இணைந்திருக்கின்ற நிலையில், தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனா்.
