ஆப்கானிஸ்தானிலிருந்து 13 லட்சம் கோடி (169 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்துடன் தப்பிச்சென்றுவிட்டேன் என்று கூறுவது, எனது நடத்தையை படுகொலை செய்யும் செயல் என்று முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி மறுப்பு தெரிவித்துள்ளார்
ஆப்கானிஸ்தான் முழுமையும் தலிபான்களின் கைக்குள் வந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி அமெரிக்க ஆதரவு ஆப்கன் அரசின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அதிபர் மாளிகையில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் தப்பியோடி பறந்துவிட்டார். அங்கிருந்து செல்லும் போது, நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க அமெரிக்க டாலர் கரன்சிகளை அடைத்து எடுத்துச் சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
இதற்கிடையே தஜிஸ்கிஸ்தான் நாட்டிலுள்ள ஆப்கன் நாட்டின் தூதர் முகமது ஜாஹிர் அக்பர் இன்டர்போல் போலீஸுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
ஆப்கனின் அதிபர் அஷ்ரப் கனி, அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப், முன்னாள் தலைமை ஆலோசகர் ஃபசில் முகமது ஆகியோர் ஆப்கானிஸ்தானின் கருவூலத்தைக் கொள்ளையடித்து விட்டனர். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகங்கள், முன்னாள் அதிபர் கனி 169 பில்லியன் டாலர்களை தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டதாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
பணத்தோடு முன்னாள் அதிபர் கனி ஆப்கனை விட்டு ஓடிவிட்டதாக அவரது முன்னாள் அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மறுத்துள்ள அஷ்ரப் கனி
அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தியின்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஃபேஸ்புக்கில் ஒரு லைவ் வீடியோவை நேற்று முன்னாள் அதிபரான அஷ்ரப் கனி வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் தன்னைப் பற்றிய செய்திகளை மறுத்துள்ளார்.
“நான் தங்கியிருந்தால், காபூல் இரத்தம் சிந்துவதை நான் பார்த்திருப்பேன். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலேயே நான் காபூலை விட்டு வெளியேறினேன்.
காபூல் மற்றொரு ஏமன் அல்லது சிரியாவாக அதிகாரப் போட்டிகளால் மாற்றப்படக் கூடாது என்பதால்தான் நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் நான் மில்லியன் கணக்கான டாலர்களுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக சிலர் வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். நான் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறும்போது அணிந்திருந்த ஆடை மற்றும் மாற்று ஆடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
ஆனால் எனது நடத்தையை படுகொலை செய்யும் வகையில் நான் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டேன் என்று சிலர் பொய்களைப் பரப்புகிறார்கள். நீங்கள் சுங்க அதிகாரிகளிடம் விசாரித்தாலே இதெல்லாம் பொய் என்று தெரியும்” என்று கூறியிருக்கும் அஷ்ரப் கனி, தான் விரைவில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.
