ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மொத்தமாக கைப்பற்றிவிட்டனர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தாலிபான் வசம் சென்றுவிட்டது.

அமெரிக்க படைகள் கொஞ்சம் அவசரமாக வெளியேறிய காரணத்தால் காபூலில் இருந்த தூதரங்கள் எதுவும் பாதுகாப்பு இன்றி கைவிடப்பட்டது.

அமெரிக்க படைகள் காபூல் விமான நிலையத்தில் மட்டுமே மீட்பு பணிகளை செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே கந்தஹார் மற்றும் மஸார் இ ஷெரிப் துணை தூதரகங்களில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது .

ஆனால் காபூல் வேகமாக வீழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அங்கு இந்திய 200 தூதரக அதிகாரிகள், காவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் சிக்கி தவித்தனர்.

இவர்களை உடனடியாக மீட்க வேண்டிய பெரிய கடமை இந்தியாவிற்கு வந்தது.

திட்டப்படி தூதரக அதிகாரிகளை விமானப்படை விமானத்தில் மீட்கலாம் என்றே முடிவு செய்யப்பட்டது. மற்ற அதிகாரிகள் மற்றும் மக்களை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டு வரலாம் என்ற பிளான் இருந்தது.

ஆனால் தாலிபான்கள் காபூலை பிடித்ததும் தங்கள் விமான பகுதியை “கட்டுப்பாடு இல்லாத பகுதி” என்று அறிவித்தது.

இதன் அர்த்தம் இங்கு பயணிகள் விமானங்கள் வந்தால் அதை தரையிறக்க லேண்டிங் கிளியரன்ஸ் கிடைக்காது.

யாராவது ஆர்பிஜி வைத்து விமானங்களை தாக்கினால் கூட கேட்க முடியாது. இதனால் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இங்கே செல்லும் முடிவை ரத்து செய்தது.

ஆப்கான் வழியாக பறக்க இருந்த நியூயார்க் டூ டெல்லி விமானம் கூட பாதை மாற்றி அனுப்பப்பட்டது.

இதனால் விமானப்படை மூலம் தூதரக அதிகாரிகளையும், மக்களையும் மீட்பது மட்டுமே ஒரே வழியாக இருந்தது.

ஆனால் அங்குதான் ஒரு சிக்கல் வந்தது. தூதரக அதிகாரிகள் கடைசி கட்டமாக ஆவணங்களை சேகரிக்கும் பணி, ஆவணங்களை அழிக்கும் பணி, சில முக்கிய கோப்புகளை பாதுகாக்கும் பணியில் இருந்த காரணத்தால் காபூல் இந்திய தூதரகத்திலேயே தங்கினர்.

இவர்களை இந்திய விமானப்படை அதிகாரிகள் உள்ளே சென்று மீட்டு கொண்டு வர வேண்டும்.

தாலிபான் படைகள் அவ்வளவு எளிதாக இந்திய அதிகாரிகளை தாக்கி பிரச்னையை தேடிக்கொள்ளாது என்றாலும் கூட இந்தியர்களை வெளியேற விடாமல் தாலிபான்கள் தடுக்க முடியும். இதனால் அங்கு கொஞ்சம் பதற்றம் நிலவியது. அதோடு பொதுவாக தூதரகங்களை சுற்றி தூதரக நாட்டு படைகள் காவலுக்கு நிற்கும்.

சென்னை துணை தூதகரத்தில் அமெரிக்கர்கள் காவலில் நிற்பது போல காபூலில் இந்திய காவலர்கள் தங்களது தூதகரத்தை சுற்றி நிற்பார்கள். இதை கிரீன் சோன் என்று அழைப்பார்கள்.

அதாவது பாதுகாப்பான பகுதி. ஆனால் தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய சில நிமிடங்களிலேயே தூதரகங்களின் முன் தாலிபான் படைகள் சுற்றி நிற்க தொடங்கின.

இதனால் அங்கு இருந்த கிரீன் சோன் உடைக்கப்பட்டது. தாலிபான்கள் யாரையும் தாக்கவில்லை என்றாலும் மிரட்டல் தொனியில் தூதரகத்தை சுற்றி ஆங்காங்கே நின்றனர்.

இவர்களிடம் மோதல் வளர்க்காமல் இந்திய விமானப்படை அதிகாரிகள் நேற்று பாதுகாப்பாக உள்ளே சென்று ஒவ்வொரு கட்டமாக அதிகாரிகளை மீட்டு விமான நிலையம் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் இவர்களை மீட்டு கொண்டு வரும் வழியிலும் கூட ஆபத்து இருந்தது.

சாலையில் பல்வேறு இடங்களில் தாலிபான்கள் செக் போஸ்ட் அமைத்து தீவிரமாக சோதனைகளை செய்து வந்தது. இந்திய அதிகாரிகளையும் இவர்கள் நேற்று தடுத்து இருக்கிறார்கள். இந்தியர்களின் கோப்புகளை இவர்கள் கேட்கவில்லை. ஆனால் சில முக்கியமான உடமைகளை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. இதை நீங்கள் எடுத்த செல்ல முடியாது என்று சில தனிப்பட்ட உடைமைகளை எடுத்து செல்ல தாலிபான்கள் மறுத்துள்ளனர். இதனால் அங்கே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த தனிப்பட்ட உடைகள் எதிலும் இந்திய அரசு குறித்த ரகசியங்கள் இடம்பெறவில்லை என்பதால் கடைசியில் இதை அங்கேயே விட்டுவிட்டு இந்தியர்கள் விமான நிலையம் வந்துள்ளனர்.

நேற்று இரண்டு விமானம் காபூலில் இருந்து இந்தியா வருவதாக இருந்தது. குளோப்மாஸ்டர் C17 ரக விமானம் ஆகும் இது. இதை இரண்டையும் சுற்றி இந்திய வீரர்கள் விமான நிலையத்தில் பெரி மீட்டர் அமைத்து இருந்தனர்.

அதாவது வெளிநாடு தப்பி ஓடி செல்ல முயலும் ஆப்கான் மக்கள் இந்த விமானத்தில் ஏறாமல் தடுப்பதற்காக கட்டுப்பாட்டு பகுதி போல இந்திய வீரர்கள் சுற்றி நின்றனர்.

நேற்று மாலை முதல் செட் தூதராக அதிகாரிகள் குளோப்மாஸ்டர் C17 விமானம் மூலம் இந்தியாவிற்கு புறப்பட்டனர். முதல் விமானம் கொஞ்சம் சிக்கல் இன்றி புறப்பட்டது.

ஆனால் இரண்டாவது விமானம்

ஆனால் இரண்டாவது போர் விமானம் புறப்படும் முன் ஆப்கானிஸ்தானில் தாலிபான் காபூல் விமான நிலையத்தின் ஆபரேஷனை மூடியது.

இரவு நேரம் என்பதால் அசம்பாவிதத்தை தடுப்பதற்காக ஆபரேஷன் தடை செய்யப்பட்டது. இதையடுத்து விமானத்திலேயே முடங்கிய அதிகாரிகள் இன்று அதிகாலை விமான ஆபரேஷன் தொடங்கப்பட்ட பின் இந்தியாவிற்கு புறப்பட்டனர்.

இரண்டு விமானங்களை சேர்த்து மொத்தமாக 250 பேர் வரை மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், இந்தோ திபெத் பார்டர் படையினர் உட்பட பலரை இந்த ஆப்ரேஷன் மூலம் இந்தியா மீட்டு உள்ளது.

இன்னும் சில மீட்பு பணிகளை இந்திய விமானப்படை இங்கு மேற்கொள்ள உள்ளது. இவர்கள் எல்லோரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட உள்ளனர். தூதரகத்தில் இருந்து அனைத்து முக்கிய ஆவணங்கள், ரகசிய பைல்கள் எல்லாம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் இனி இந்திய தூதரகம் இயங்குமா என்பதை எதிர்காலமே தீர்மானிக்கும்!