மத்திய அரசு நிதி குறைவாக கொடுக்கிறது!’ – சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி, அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில், “யூனியன் பிரதேசமான புதுச்சேரி, மத்திய நிதிக் குழுவிலோ அல்லது யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக் குழுவிலோ சேர்க்கப்படவில்லை.

எனவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உரிய வழிமுறைகளை ஆய்வு செய்து நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற வழங்கி வரும் 60:40 என்ற விகிதாசாரத்தை மாற்றி 2016-ம் ஆண்டிற்கு முன்பு இருந்ததைப் போலவே 90:10 என்ற விகிதாசாரத்தில் வழங்க வேண்டும் என்று ஆகஸ்ட் 6-ம் தேதியன்று நடைப்பெற்ற நிதி ஆயோக் குழு கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறோம்.

மேலும் மத்திய அரசின் நிதி உதவியானது இதுவரை ஒரே நிலையாகவே இருந்து வந்திருக்கிறது. 2021-2022-ம் நிதி ஆண்டிலும் 1.58 சதவிகிதமாகவே இருக்கிறது.

அதேபோல கடந்த 5 ஆண்டுகளிலும் 4 முதல் 5 சதவிகிதம் என்ற மிகக் குறைந்த அளவில்தான் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறோம்.