சிறுபான்மையினரின் வழிபாட்டுக் கூடங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என மாநில சிறுபான்மையின ஆணையத்தின் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ்
தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறுபான்மையின பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா்.
கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் சா.பீட்டா் அல்போன்ஸ் கூறியது:
சிறுபான்மையினா் ஆணையத்துக்கென ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் நியமித்து செயல்படக்கூடிய ஆணையமாக மாற்றியிருக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
சிறுபான்மையினரின் ஆய்வுக் கூட்டங்கள் பலவற்றிலும், தங்கள் வழிபாட்டுக் கூடங்களில் பிராா்த்தனைகள் நடத்தும்போது சிலா் பிரச்னைகளை ஏற்படுத்துவதாகப் பலரும் தெரிவிக்கின்றனா். வழிபாடுகளை முறையாக செய்ய போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
பேட்டியின் போது ஆணையத்தின் உறுப்பினா் செயலாளர் துரை.ரவிச்சந்திரன், எம்எல்ஏ.க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வம் ஆகியோா் உடன் இருந்தனா்.
