இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ (NSO) நிறுவனத்திடமிருந்து பெகாசஸ் (pegasus) உளவு சாப்ட்வேரை மத்திய பாதுகாப்புத்துறை (defence ministry) அமைச்சகம் வாங்கவில்லை என்று ராஜ்யசபாவில் (Rajya sabha) எழுத்துப்பூர்வமான பதிலை அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி:

பெகாசஸ் சாப்ட்வேரை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், சில நீதிபதிகள், மூத்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் சர்வதேச அளவில் 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய புலனாய்வு முடிவில் தெரிய வந்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளிக்கு காரணமாக மாறியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மத்திய அரசுதான் இதன் பின்னணியில் இருக்கிறது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஏனென்றால், பெகாசஸ் உளவு சாப்ட்வேர் எந்த ஒரு நாட்டுக்கும் அந்த நாட்டு அரசுக்கு மட்டுமே என்எஸ்ஓ அமைப்பால் வழங்கப்படுமே தவிர தனி நபர்களுக்கு வழங்கப்படுவது கிடையாது. அல்லது வேறு அமைப்புகளுக்கு வழங்கப்படாது.

அரசுக்கு மட்டுமே விற்பனை
எனவே, பெகாசஸ் வைத்து உளவு பார்க்கப்பட்டு இருந்தால் அது மத்திய அரசால் வாங்கப்பட்டதாகத்தான் இருக்க முடியும். எனவே நீங்கள் சாப்ட்வேரை வாங்கினீர்கள் இல்லையா என்பதை தெளிவுபடுத்துங்கள் என்று ராகுல்காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் இதுவரை மத்திய அரசு அது தொடர்பாக நேரடியாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

திட்டவட்ட பதில் வரவில்லை
இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பிய முதல் நாளில், இந்திய அரசு ஜனநாயகத்தை மதிக்கிறது என்ற வகையில் ஒரு நீண்ட அறிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த உளவு சாப்ட்வேர் வாங்கப்பட்டதா இல்லையா என்பதைப் பற்றி நேரடி பதில் இல்லை. தன்னுடைய செல்போன் கூட உளவு பார்க்கப்பட்டிருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டிய பிறகும் கூட திட்டவட்டமாக மத்திய அரசு பதில் அளிக்காமல் இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில்தான் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம், உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர். தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தீவிரமான குற்றச்சாட்டு
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மிகவும் தீவிரமானது என்று தலைமை நீதிபதி கருத்து பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில்தான், ராஜ்யசபா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சிவதாசன் இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் பதில் வழங்கப்பட்டிருக்கிறது.

அதில், என்எஸ்ஓ குரூப் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் எந்த ஒரு வர்த்தக பரிமாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்
இந்த விவகாரத்தில் மத்திய அரசிடமிருந்து வெளியாகியுள்ள முதல் தெளிவான பதில் இது என்று கூறப்படுகிறது.

எனவே அடுத்து உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இது தொடர்பான வாதங்கள் முன்வைக்க கூடும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம், பாதுகாப்பு அமைச்சகம் வாங்கவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளதே தவிர வேறு அமைச்சகம் ஏதாவது இதை வாங்கியிருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் முன் வைக்க வாய்ப்புள்ளது.

எனவே பெகாசஸ் தொடர்பான விவாதங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன