தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

இதையொட்டி மாலை 5 மணிக்கு சட்ட சபைக்கு வருகை தந்த ராம்நாத் கோவிந்த்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது புத்தகம், சால்வை அணிவித்து முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார்.
முன்னதாக, இந்த விழாவுக்கான வரவேற்புரை சபாநாயகரால் நிகழ்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கருணாநிதி உருவப்படத்தை குடியரசு த்தலைவர் ராம்நாத் கோவிந்த் பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்
அப்போது அங்கே குழுமியிருந்த சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர் . கருணாநிதியின் பிரம்மாண்ட உருவப்படத்துக்கு கீழே, ‘காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருந்தது.
இது கருணாநிதியால் அவ்வப்போது கூறப்படும் வெற்றிக்கான வாசகம் ஆகும்.
அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம்
தனது வாழ்நாள் முழுக்க கண்ணயராது தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தவர் கருணாநிதி. குறிப்பாக, காலை 4 மணிக்கெல்லாம் தினந்தோறும் எழுந்திருக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. இரவு சுமார் 5 மணி நேரம் மட்டும் தான் அவர் தினமும் தூங்கினார். எனவேதான் அரசியல் மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியம், நாடகம் , திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடிந்தது. முத்திரை பதிக்க முடிந்தது
ஒவ்வொரு நிமிடத்தையும் பொன்போல கருதக் கூடியவர்
உடல் நோய்வாய்ப்பட்டு மரணம் அடையும் தருவாய்க்கு முன்புவரை அவர் தொடர்ந்து துரிதமாக இயங்கிக் கொண்டே இருந்தார் . ஒவ்வொரு நிமிடத்தையும் பொன்போல பார்க்கக் கூடியவர் கருணாநிதி. தொலைக்காட்சி பிரபலமான கோபிநாத் ஒரு முறையை கருணாநிதியை பேட்டி காணும் போது உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை பணிகள் செய்வதற்கு கால நேரம் கிடைக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி.. இருக்கும் நேரத்தை வீணாக்காமல் உரிய வகையில் பயன்படுத்துகிறேன் அதுதான் எனது வெற்றிக்கு காரணம் என்று பதில் சொன்னார்.
வாழ்க்கையே உதாரணம்
எனவே காலம் பொன் போன்றது என்ற வார்த்தைக்கு அவரது வாழ்க்கை ஒரு இலக்கணமாக இருந்தது. அடுத்த வரி, கடமை கண் போன்றது என்பதற்கும். கடமையை செய்ததில், அவர் சமகால அரசியல் தலைவர்களில் ஒரு சரியான உதாரணம்.
தள்ளாத வயதிலும் தனது முதல்வர் பதவிக்கான கடமையை ஆற்ற அவர் தவறியதில்லை. அடுத்தடுத்து 2 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் கூட தங்கள் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் யாரும் அதிமுக பக்கம் போக விடாமல் ஒரு கட்சித் தலைவராகவும் சிறப்பாக கடமையாற்றியவர் கருணாநிதி.
கடமையே கண்ணாக இருந்த கருணாநிதி
சமூக நீதி, கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களில் தனது கடமையை அவர் என்றுமே விட்டுக் கொடுத்தது கிடையாது.
எனவே கருணாநிதியின் உருவ படத்திற்கு கீழே , காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்ற வரிகள் இடம் பெற்றிருப்பது எக்காலத்திற்கும் சாலப் பொருந்தும் என்று கட்சி வேறுபாடில்லாமல் அத்தனை தலைவர்களும் புகழாரம் சூட்டுகிறார்கள்.
கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைவதாக தமிழில் தெரிவித்தார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மேலும் பேசுகையில்
உண்மையில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த நாள். தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்றதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினார்.
சட்டசபையின் மாண்புகளையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டசபை மிகவும் சிறப்பான அமைப்பாக உள்ளது என்று கூறினார்.
பல முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இந்த சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
நம் நாடு இந்த ஆண்டு பல துறைகளில் சாதனை படைத்துள்ளது தமிழக மக்களின் சிறப்புக்களையும் பெருமைகளையும் திறமைகளையும் மகாகவியின் பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசினார் குடியரசுத்தலைவர்
தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் பெரும்பங்காற்றியவர் கருணாநிதி என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், தனது புரட்சிகரமான கருத்துக்களால் சமூக சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.
அவரது உருவப்படத்தை நூற்றாண்டு விழா காணும் இந்த சட்டசபையில் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.
இந்த சட்டசபையில் மகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், எம்ஜிஆர், ஜெயலலிதா,வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
16 வது தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
