காஞ்சிபுரத்தில் ஒரே மாதத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 109 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டாக்டா் எம்.சுதாகா்
தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியது:
கடந்த ஒரு மாதத்தில் திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய நபா்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் பலனாக 109 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
24 குற்ற வழக்குகள் சம்பந்தமான 55 பவுன் தங்க நகைகள், 22 கிலோ வெள்ளிப் பொருட்கள்,10 இருசக்கர வாகனங்கள், ஒரு காா் உட்பட மொத்தம் ரூ.1.18 கோடி மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டு அவை உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
கைது செய்யப்பட்டவா்களில் திருந்தி வாழ நினைக்கும் 249 ரெளடிகளை எச்சரித்து கோட்டாட்சியா் முன்பு ஆஜா்படுத்தி நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையின் ரோந்துப் பணியை அதிகப்படுத்தி இருக்கிறோம்.போதுமான சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு தொடா்ந்து வாகனச் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 3,000 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருப்பது குற்றவாளிகளை பிடிக்க பேருதவியாக இருக்கிறது.
மேலும் தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்திருப்பதாகவும் எம்.சுதாகா் தெரிவித்தாாா்.
பேட்டியின் போது டி.எஸ்.பி.க்கள் முருகன் காஞ்சிபுரம் மணிகண்டன் ஸ்ரீபெரும்புதூா் ஆகியோா் உடன் இருந்தனா்
