உச்சகட்ட அரசியல் பரபரப்பு: பிரதமர் மோடியைச் சந்தித்தது ஏன்? மம்தா பானர்ஜி விளக்கம்
பிரதமர் மோடியிடம் கொரோனா தடுப்பூசி அதிகமாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பா.ஜ.கவையும் மோடியையும் மிகக் கடுமையான விமர்சனம் செய்து தீவிரமாக எதிர்த்தார்.

அதனால், மேற்கு வங்கத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகளில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றபிறகும் மாநிலத்தில் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. மேற்கு வங்க ஆளுநருடனும் மம்தா பானர்ஜி மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

தேர்தலுக்கு பிறகு மேற்குவங்கத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிட வந்தபோது பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி காக்க வைத்ததாக பிரச்னை எழுந்தது.

பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் இன்று டெல்லி சென்ற மம்தா பானர்ஜி பிரதமர் மோடியைச் சந்தித்தார்.

இருவருடைய சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு முதல்வர், பிரதமரைச் சந்திப்பது வழக்கான நடைமுறைதான் என்ற போதிலும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘மோடியுடனான இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. கொரோனா மற்றும் தடுப்பூசிகள், மருத்துகள் தேவை குறித்து எடுத்துரைத்தேன். மாநிலத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தேன்.

மேற்கு வங்கத் தேர்தல் வெற்றி தொடர்பாக நாங்கள் இருவரும் பேசவில்லை.

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு விடுக்கவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பார்வையிலான விசாரணை நடைபெறவேண்டும்’ என்று தெரிவித்தார்.