இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஊடக சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகி விட்டதாக அரசியல் தலைவர்கள் முதல் பொது மக்கள் வரை அனைவரும் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியப் பத்திரிகையாளர்கள் சுமார் 40 பேர் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் தாக்கம் தணிவதற்குள் தற்போது டைனிக் பாஸ்கர் ஊடக நிறுவனத்தில் அதிரடியாக நடத்தப்பட்டுள்ள வருமான வரி சோதனையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகளவில் பத்திரிகை பதிப்பு விற்பனை அளவில் மூன்றாவது இடமும், இந்திய அளவில் முதலிடமும் வகிக்கும் இந்தி செய்தி நிறுவனமான டைனிக் பாஸ்கர் குழுமம், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை மோடி அரசாங்கம் எப்படிச் சமாளித்தது என்பதனை துல்லியமான செய்திகளின் மூலம் வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியது.

உத்தரப்பிரதேச கொரோனா மரணங்கள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, கொரோனா எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டது என கொரோனா கால அவலங்களை அந்த நிறுவனம் தோலுரித்துக் காட்டியிருந்தது.

நாட்டின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான டைனிக் பாஸ்கர் குழுமம், உ.பி-யில் கங்கா நதியில் உடல்கள் மிதந்ததையும், அவற்றை மாநில அரசு அவசர அவசரமாக ஆற்றங்கரைகளில் புதைத்ததையும் தனது செய்திகள் மூலம் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தியது.

டைனிக் பாஸ்கர்
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியான பெகாசஸ் ஸ்பைவேரின் 40 இந்தியப் பத்திரிகையாளர்கள் பட்டியலில் டைனிக் பாஸ்கர் குழுமப் பத்திரிகையாளர்கள் உள்ளார்களா என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், டைனிக் பாஸ்கர் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலையிலிருந்து டெல்லி, மத் தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 30 அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அலுவலகங்களைத் தொடர்ந்து, குழுமத்தின் விளம்பரதாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், தற்போது டைனிக் பாஸ்கர் குழுமத்தின் ஜெய்ப்பூர், அகமதாபாத், போபால் மற்றும் இந்தூர் அலுவலகங்களில் சோதனைகள் நடந்து வருவதாக டைனிக் பாஸ்கர் செய்தி நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கிறார்.

அதே போல், டைனிக் பாஸ்கர் குழுமத்தை தொடர்ந்து, வருமான வரித்துறையினர் உத்தரப்பிரதேச செய்தி நிறுவனமான பாரத் சமாச்சாரிலும் சோதனை செய்திருக்கின்றனர்.

பாரத் சமாச்சார் செய்தி தொலைக்காட்சியின் லக்னோ தலைமை அலுவலகத்திலும், செய்தி ஆசிரியர் வீட்டிலும் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் தேடினர். பாரத் சமாச்சார் நிறுவனத்தில் வரி மோசடி நடந்துள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதால் தான் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாரத் சமாச்சார் நிறுவனம், குறி வைத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை என்று உத்தரப்பிரதேச அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

வருமான வரித்துறை சோதனை
உத்தரப்பிரதேச செய்தி நிறுவனமான பாரத் சமாச்சாரை குறிவைத்து இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், உ.பி-யில் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்தும் தொடர்ந்து செய்தி பதிவிட்டதற்காக இந்த நடவடிக்கையை யோகி அரசு ஏவி விட்டிருப்பதாகக் கூறி வருகின்றன.

டைனிக் பாஸ்கர் மற்றும் பாரத் சமாச்சார் செய்தி நிறுவனங்களில் நடத்தப்பட்டுள்ள இந்த வருமான வரித்துறை சோதனைகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,

“ஜனநாயகத்தைத் தடுக்கும் மிருகத்தனமான முயற்சி செயல்”என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதே போல், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், “கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் மோடி ஆட்சியின் மிகச்சிறந்த நிர்வாகத்தை டைனிக் பாஸ்கர் தனது அறிக்கைகளின் மூலம் அம்பலப்படுத்தியது.

அதன் விளைவுதான் இந்த வருமான வரித்துறை சோதனை” என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் “ஊடகங்களின் குரலை அடக்குவதற்கான ஒரு வெட்கக்கேடான முயற்சி” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி அரசாங்கத்தின் கொரோனா கால செயல்பாடுகளை விமர்சித்து செய்தி பதிவிட்டதற்காகக் குறிவைக்கப்பட்டு இந்த வருமான வரி சோதனை நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.