பக்ரீத் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகையை திடலில் நடத்த அனுமதி வழங்குக :
தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்
நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை :
ஏக இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் ஏற்கப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம் நபி இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.
நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.
இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு அல்லாஹ் இப்ராஹிம் நபி அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான்.
இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம் நபி அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, ஜிப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான்.
மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிம் நபி க்கு கட்டளையிட்டான்.
இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.
இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை அறுத்து உணவை சகோதர சமுதாயத்தினருக்கும் பங்கிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இஸ்லாமிய மக்களுக்கு முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள் வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
வழக்கமாக பக்ரீத் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதி அல்லது ஈத்ஹா சென்று சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கமாகும்.
ஜூலை 21-ம் தேதி இஸ்லாமியர்களின் தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை வரவிருப்பதால், அன்றைய தினம் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதிக்கு அல்லது ஈத்ஹா சென்று ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற தமிழக அரசு அனுமதி அளிக்குமா? என தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
பக்ரீத் பண்டிகை நாளை மறு தினம் உள்ள நிலையில், ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகையை மசூதிகள் மற்றும் ஈத்ஹா தனிமனித இடைவெளியுடன் நடத்தி கொள்ள தமிழக அரசு விரைந்து அனுமதிதர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பள்ளிவாசல் மற்றும் ஈத்ஹா தொழுகைக்கு வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிந்தும் , கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, தொழுகைக்கு தேவையான தொழுகை விரிப்புகளை தனித்தனியே கொண்டு வருவது, முதியவர்கள், குழந்தைகள் வீடுகளிலேயே தொழுகை செய்து கொள்வது நல்லது
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு சிறப்பு தொழுகை நடத்திட அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
