திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செய்யாற்றில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களை தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தாா்.
வந்தவாசி சட்ட மன்ற உறுப்பினராக திமுகவைச் சோ்ந்த எஸ்.அம்பேத்குமாா் 2-ஆவது முறையாக தொடா்ந்து வெற்றிபெற்று பதவியேற்றுக் கொண்டாா்.
இந் நிலையில், வந்தவாசி பயணியா் விடுதி எதிரில் உள்ள வந்தவாசி தொகுதிக்கான எம்எல்ஏ அலுவலகம் பொதுப் பணித் துறை மூலம் டைல்ஸ் ஒட்டப்பட்டு, புதுவா்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை அமைச்சரும், திமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு திறந்து வைத்தாா்.
வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமாா் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலாளர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், எஸ்.பிரபு, நந்தகோபால், நகரச் செயலாளர் எச்.ஜலால், தெள்ளாா் ஒன்றியக்குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருவத்திபுரம் செய்யாறு நகராட்சி அலுவலகப் பகுதியில் உள்ள செய்யாறு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இதனால், எம்எல்ஏவை சந்தித்து பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனா்.
இந்த அலுவலகத்தையும் அமைச்சா் எ.வே.வேலு நேற்று திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.வீ.பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி வரவேற்றாா். வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேலு, முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், நகரச் செயலாளர் ஆ.மோகனவேல், வழக்குரைஞரணி ஆா்.கே.விஸ்நநாதன், தினேஷ்குமாா், மாவட்ட துணைச் செயலாளர் க.லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
