பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தபோதும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயராது – போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் இயங்கிவரும் சாலைப் போக்குவரத்து நிறுவன பயிற்சி மையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கும்மிடிபூண்டியில் புதிய பணிமனைக்கு இடம் தேர்வு செய்தல் ஆகியவற்றை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு, அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது:–-

முதலமைச்சரின் உத்தரவின்படி, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் நடைமுறையானது அமுலுக்கு வந்தபோது, பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 6,000 லிருந்து 7,291 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பயணம் செய்யும் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் திருநங்கையர்கள் ஆகியோர்களுக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது.

இது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்ப்பினை பெற்றுள்ளது.

15,627 பேருந்துகள் இயக்கப்படுகின்றன

கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஏறத்தாழ, 19,700 பேருந்துகளில் தற்பொழுது 15,627 பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படுகின்றன. மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,650 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நிர்பயா திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழக 2,800 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

விரைவில் அனைத்து நகரப் பேருந்துகளிலும் இத்திட்டமானது செயல்படுத்தப்படும்.

பேருந்துகளின் ஆயுட்காலமானது புதிய திட்டத்தின்படி, 12 வருடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழைய பேருந்துகளின் எண்ணிகை படிப்படியாக குறைக்கப்பட்டு, 2,000 டீசல் பேருந்துகள் வாங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன், மின்சாரப் பேருந்துகள் வாங்கிடவும் ஏற்பாடு செய்யப்படும்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  கும்மிடிபூண்டியில், 4 ஏக்கர் 70 சென்ட் பரப்பளவில் நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இங்கு பணிமனை அமைப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எட்டப்படும்.

பயண கட்டணம் உயராது

கொரோனா காலக்கட்டங்களில் நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின், 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக, பணியாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று, கூடிய விரைவில் சுமூகமான முடிவு எட்டப்படும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருந்தாலும், பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளின் பயண கட்டணம் தற்போது உயர்த்தப்படமாட்டாது.

தொற்று ஏற்படாத காலக்கட்டங்களில், பேருந்துகள் வாயிலாக, நாள்தோறும் ஏறத்தாழ, 1 கோடியே 60 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். தொற்றின் போது பயணிகளின் எண்ணிக்கை 90 லட்சமாக குறைந்துள்ளது.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில், பாண்டிச்சேரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து 364 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு குடிநீர் வழங்கும் பிளான்ட் கும்மிடிப்பூண்டியில் ஒரு வருட காலமாக செயல்படாமல் உள்ளது. மீண்டும் இயக்கி பயணிகளுக்கு 1 லிட்டர் பாட்டில், 1/2 லிட்டர் பாட்டில் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று முடிவெடுக்கும் பட்சத்தில், பள்ளி, கல்லூரி வாகனங்கள் கட்டாயம் புதுப்பிக்கப்பட்டு இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தயானந்த் கட்டாரியா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ், போக்குவரத்துத்துறை தனி அலுவலர் பி.திருவாம்பலம் பிள்ளை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டையஸ் மற்றும்  அலுவலர்கள் உடன் இருந்தனர்.