தமிழ்நாட்டிற்கு வருகிற 12 ந்தேதிக்குள் 15¾ லட்சம் தடுப்பூசிகள் தருவதாகவும், இந்த மாதத்துக்குள் 71 லட்சம் ஊசிகள் தருவதாகவும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று மத்திய சுகாதாரத்துறை செயலாளரை சந்தித்து துறை ரீதியான கோரிக்கைகளை முன் வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

“மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திப்பதாக இருந்தது. மத்திய அமைச்சரவை மாற்றத்தினால் அடுத்த வாரம் அவர் வருவதாக சொல்லி இருக்கிறார். இதற்கிடையே அதிகாரிகள் அளவில் அதை பின்தொடர முதலமைச்சர் கூறியதன் அடிப்படையில் நான் டெல்லிக்கு வந்தேன். மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை நான் சந்தித்தேன்.

இந்த மாதத்துக்குள் 71 லட்சம் ஊசிகள்

தமிழகத்தின் தடுப்பூசி பற்றாக்குறை பற்றி எடுத்துரைத்தேன். மாதத்துக்கு 2 கோடி வரை தடுப்பூசி போடும் திறன் தமிழக அரசிடம் உள்ளது. ஏற்கனவே ஒரே நாளில் 4.73 லட்சம் ஊசிகள் போட்டு இருக்கிறோம். தற்போது தடுப்பூசி உற்பத்தி சவாலாக இருப்பதால் வருகிற 12-ந் தேதிக்குள் 15 லட்சத்து 87 ஆயிரத்து 580 தடுப்பூசிகள் தருவதாகவும், இந்த மாதத்துக்குள் 71 லட்சம் ஊசிகள் தருவதாகவும் உத்தரவாதம் தந்து இருக்கிறார்கள். 15 லட்சம் தடுப்பூசிகள் 2 நாளில் வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டமைப்பு பணிகள் தொடக்க நிலையில் உள்ளது. அதற்கான அனுமதியை தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றியும் பேசினோம். கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்த கேட்டோம். விரைவுபடுத்துவதாக சொன்னார்கள். மேலும் ஜம்மு காஷ்மீர், பீகார் போன்ற இடங்களில் 50 முதல் 100 மாணவர்களுடன் தற்காலிகமாக தொடங்கி இருக்கிறார்கள். அதைப்போல தமிழக அரசும் மதுரைக்கு அருகில் உள்ள சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று கூறினர்.

தற்போது உள்ள சூழ்நிலையில் மதுரையில் தற்காலிகமாக மாணவர்களை சேர்க்க முடியாது. ஏனெனில் அங்கு 250 மாணவர்கள் தற்போது இருக்கிறார்கள். அருகில் உள்ள மாவட்டங்களில் தற்காலிகமாக கல்லூரியை தொடங்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. வருகிற 16-ந் தேதி இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் முடிவை மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

3வது அலையை எதிர்க்கொள்ள தயார்

அடுத்ததாக கொரோனா 3-வது அலைக்கு எப்படி தயார் ஆவது? என்பது பற்றி ஆலோசித்தோம். ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரித்தல், குழந்தைகளுக்கு 20 சதவீதம் படுக்கை ஒதுக்குதல். கோவிட் மையங்களை அதிகரித்தல் போன்ற பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அதைப்போல ஒன்றியத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூடுதலாக தர வேண்டும் என்று கேட்டோம். பரிசீலிப்பதாக சொன்னார்கள்.

செங்கல்பட்டு, நீலகிரி தடுப்பூசி உற்பத்தி மையங்கள் பற்றியும் பேசினோம். தமிழக அரசே இதை ஏற்று நடத்த தயாராக இருப்பது பற்றியும் சொன்னோம்.

தடுப்பூசியை பொறுத்தவரை மாதத்துக்கு 2 கோடி தேவை. தினசரி 7 முதல் 8 லட்சம் வரை போடலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 5.38 கோடி ஊசிகள் தேவை. 2 டோஸ்கள் என்றால் 11.76 கோடி வேண்டும். அடுத்த 10 நாட்களுக்குள் இதை நிறைவேற்றினால்தான் 3-வது அலையை எதிர்கொள்வதற்கு சரியாக இருக்கும். பொதுமக்கள் கவனமாக இருந்தால் 3-வது அலையை தடுக்க முடியும்”

இவ்வாறு அவர் கூறினார்.