கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் தடுப்பூசி முகாம் ரத்து
சென்னை
நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன்பின் மே 1 ந்தேதியில் இருந்து 18 வயது கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அரசு அனுமதி அளித்தது. இதனால், மக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களில் போதிய தடுப்பூசிகள் இன்றி பணிகள் பாதிப்படைந்து உள்ளன.
இதேபோன்று தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவியது.
தடுப்பூசி மருந்து பற்றாக்குறை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மையங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தடுப்பூசி மருந்து பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதால் இரண்டாவது நாளாக இன்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாவது நாளாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
