ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்பிடவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளை உரிய காலத்தில் வழங்கிடவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்துறையின் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், பல்வேறு அரசுத்துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து நிரப்பிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை, உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை ஆகிய கல்வி உதவித்தொகைத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், வெளிநாடுகளுக்கு சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தினைச் சீரமைத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

வீட்டுமனை பட்டா

வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் துணைத்திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின்கீழ்ச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் எனவும், இச்சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்ததோடு, கூடுதலாக வசதிகள் தேவைப்படும் குடியிருப்புகளைக் கண்டறிந்து அக்குடியிருப்புகளுக்கு அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்கள், ஆதிதிராவிடர் அல்லாத பிற இனத்தவர்களிடம் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை மீட்டு, ஆதிதிராவிடர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் பணியை விரைந்து செயல்படுத்துமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

வறிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வுசெய்த முதலமைச்சர், துரித மின் இணைப்புத் திட்டத்திற்கான வைப்புத் தொகையினை உயர்த்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியம், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை இணைச் செயலாளர் எஸ். பழனிசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் எஸ்.மதுமதி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் எச்.எம். ஜெயராம், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் வி.சி.ராகுல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.