ஓவைஸி மற்றும் மோகன் பகவத்துக்கும் ஒரே டி.என்.ஏ இருக்கும் நிலையில், மதமாற்ற தடைச் சட்டம் எதற்கு? என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்விஎழுப்பியுள்ளார்.

அண்மையில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லீம் பிரிவான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மோகன் பகவத், ஒரு இந்து, இந்த நாட்டில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக் கூறுவார்களேயானால் அவர் இந்துவே அல்ல. பசு புனிதமான விலங்கு என்றாலும் அதற்காக கும்பலாக தாக்குதலில் ஈடுபடும் இந்துக்கள் இந்துத்துவா கொள்கைக்கு எதிரானவர்கள். அவர்கள் மீது எந்த பாகுபாடும் காட்டாமல் சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மக்களுக்கு ஒரே டி.என்.ஏ தான் உள்ளது. இந்து- முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை வேண்டும் எனப் பேசுபவர்களுக்கு ஒன்றை சொல்கிறோம். இங்கு நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்றார்.

வெறுப்பு அரசியல் ஏன்?

இந்நிலையில் மோகன் பகவத்துக்கு, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், ” இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு ஒரே டி.என்.ஏ தான் உள்ளது எனும்போது, மதமாற்ற தடை சட்டம் எதற்கு? அதனால் என்ன பயன்? லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் எதற்கு? இஸ்லாமிய கட்சி வைத்துள்ள ஓவைஸி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கும் ஒரே டி.என்.ஏ இருக்கும் நிலையில், முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.