பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டனர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டன பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில்:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் கூட மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 16 முறையும், 6 மாதத்தில் 93 முறையும் விலையை உயர்த்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களை பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடரும்
இதனை கண்டித்து தான் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகிறோம்.
இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் தொடரும்.புதுவை மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கொரோனா வரி இன்னும் நீக்கப்படவில்லை. அதனை உடனடியாக நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலையில்லா அமைச்சர்கள்
ஏற்கனவே வைத்திலிங்கம் எம்.பி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையில்லா பட்டதாரி என்பது போல வேலையில்லா அமைச்சர்கள் புதுச்சேரியில் உள்ளதாக கூறியுள்ளார். இதேபோல் புதுச்சேரி அமைச்சர்கள் சட்டசபையில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். யாருக்கு எந்த இலாகா என்று தெரியாததால் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல அவர்களின் செயல்பாடு உள்ளது.
இது ஜனநாயகத்தின் மிகப் பெரிய கேள்விக்குறி.ஒரே நாளில் இலாகா ஒதுக்கி கொடுத்து விடலாம். ஆனால் பா.ஜ.க. முக்கிய இலாகாக்களை கேட்பதால் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. உடனடியாக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து மக்கள் நலத்திட்டங்களை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.கொரோனா நிவாரணமாக அறிவித்த ரூ.3 ஆயிரத்தில் ரூ.1500 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1500 விரைவில் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
