வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்புகள் குறையத் தொடங்கியிருப்பதால் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 7-ம் தேதி முதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஓரளவு இயல்பு நிலை திரும்பிவிட்டது.
இதனிடையே தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் திங்கட்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

இதனால் புதிதாக தளர்வுகள் அளிப்பது குறித்தும் கொரோனா கட்டுப்பாடு பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாத 11 மாவட்டங்களிலும் பேருந்துகளை இயக்குவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே சுற்றுலா தலங்களான குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற இடங்களில் பொதுமக்கள் குவிவதை தடுக்கும் வகையில் அங்கு மட்டும் இ பாஸ் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.