தமிழகத்தில் 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கையிருப்பு உள்ள நிலையில் தடுப்பூசி முகாம் இன்று
இயங்கும்.
சென்னை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப வாரங்களாக குறைந்து காணப்படுகிறது. எனினும் டெல்டா வகை கொரோனா மற்றும் 3வது அலை அச்சுறுத்தல் ஆகியவற்றால் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் தடுப்பூசி மையங்களுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிலர், சுகாதார துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்தும் வருகிறது.
இந்நிலையில் மராட்டியத்தின் புனே நகரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 50 பார்சல்களில் 6 லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.
தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்று கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
ஏற்கனவே 4 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 10 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன. தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் இன்று தடுப்பூசி முகாம் வழக்கம் போல் இயங்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
