பாசிசத்தின் பிடியிலிருந்து லட்சத்தீவைப் பாதுகாப்போம்

இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் அரபிக் கடலில் பரவிக் கிடக்கும் லட்சத் தீவுகள்…

இயற்கையின் வனப்பில் மனதைக் கவரும் விதத்தில் அமைதியாக இருக்கும் ஒரு ஊர்…

ஒரு சிறு மாவட்டத்தின் பரப்பளவை விட மிகக் குறைவான நிலப்பரப்பைக்  கொண்டுள்ள ஊர்…வெறும் 32 சதுர கிலோ மீட்டர் மட்டுமே தான் அதன் மொத்த நிலப் பரப்பு…! கவரதி அதன் தலைநகர்….!

64000 மட்டுமே மக்கள் த்தொகை கொண்ட ஊர்…

கள்ளம் கபடமற்ற, சூது வாது அறியாத மக்கள்… சுற்றுலா வரும் மக்களைத் தவிர வெளி உலகத்துடன் பெரிய தொடர்பு ஏதுமற்றவர்கள்…!

பெரும்பாலான மக்கள் மலையாள மொழி பேசுபவர்கள்…

காவல் நிலையங்கள் உள்ளன எனினும் வழக்குகள் பதியப் படுவது அபூர்வத்திலும் அபூர்வம்…
சில காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப் பட்டு 10 வருடங்களுக்கும் மேலாகி விட்டது… அந்தக் காவல் நிலையங்கள் ஆவணங்கள் பாதுகாக்கப்படும் ஒரு அரசு அலுவலகங்கள் மட்டுமே…

மதுபானம் உபயோகிப்பது மிகவும் குறைவு… எனவே பொதுவான குற்றங்கள் மிகவும் குறைவு…
சுற்றுலாவை முக்கியமான தொழிலாகக் கொண்டிருந்தும் அங்கு மதுபானம் அருந்த முடியாது…

வர்த்தகம் செய்யவும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும்… எர்ணாகுளம், கோழிக்கோடு போன்ற துறைமுகம் சார்ந்த கேரள நகரங்களை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்…

மீன் பிடி, பால் உற்பத்தி, சுற்றுலா முதலியவை முக்கியத் தொழில்கள்…

சமீப காலமாக மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு அந்தத் தீவின் மீது அரசியல் ரீதியாக இயற்கையையும், அந்த மக்களின் பண்பாடு மற்றும் வாழ்வாதாரத்தின் மீதும் தொடுக்கும் நெருக்கடிகள் தான் இன்றைய சூடான பேசு பொருள்… அது அதுகுறித்த சிறு விவரிப்பு தான் இந்த பதிவின் நோக்கம்…

இது வரை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் டெரிட்டரி பகுதியாக இருக்கும் லட்ச தீவுக்கு, மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவர், அதாவது ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தான் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் படுவார்…ஆனால் தற்போது நிர்வாக அதிகாரியாக சங்பரிவார் முகாமில் இருந்து ஒருவரை நியமித்ததிலிருந்து பிரச்சனைகள் ஆரம்பமாகியுள்ளது… குஜராத்தில் உள்ள அரசியல்வாதியான பிரஃபுல் பட்டேல் என்பவர் லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்…

இவர் வந்ததிலிருந்து புதிய புதிய சட்டதிட்டங்களை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான முறையில் இலட்சத் தீவு பகுதிகளில் நிறைவேற்றி வருகிறார்…

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடியவர்கள் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு… எந்தவிதமான சமூக அமைதியை குலைக்கும் பிரச்சனைகள் ஏதும் இல்லாத லட்சத்தீவில் தீவிரவாத தடுப்பு சட்டமும் அமல்படுத்தப்பட்டது….

இரண்டு குழந்தைகள் இருக்கும் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது… என்பது இன்னொரு புதிய சட்டம்…

தீவுக்குள் மதுபான பார்கள் உள்ளிட்ட கேளிக்கைகளை அனுமதித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தது…

மீன் பிடித் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுவதாக அறிவித்து…வீடுகளை தாங்களாகவே இடித்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றும் அப்படிச் செய்யாவிட்டால் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அப்பகுதி மக்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள்…

கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டு வாழும் மக்கள் லட்சத்தீவில் அதிகமாக உள்ளனர்…

இறைச்சி மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மக்களை அத்தொழில் செய்யவிடாமல் இடைஞ்சல் செய்யும் விதத்தில் கால்நடைகளை விற்று விட்டு… அந்த தொழில்களை விட்டு அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது…

இதன் அடுத்த கட்டமாக குஜராத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு நிறுவனமான அமுல் நிறுவனத்தின் பொருட்களை அங்கு சந்தைப்படுத்துவது என்று அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது…இதன் பின்னணியில் அமுல் என்ற நிறுவனத்தின் நிழலில் குஜராத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களை லட்சத்தீவில் வியாபார ரீதியாக நுழைப்பதே அரசின் நோக்கம் என்று மக்கள் சந்தேகம் கொள்ளக் கூடிய அளவில் இந்த திட்டங்கள் அடாவடியாக நிறைவேற்றப்படுகின்றன…

தற்போது இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் லட்சத்தீவில் வசிக்கும் மக்கள் அமுல் தயாரிப்புகளை வாங்குவதில்லை என்று முடிவெடுத்து, அந்நிறுவனத் தயாரிப்புகளை புறக்கணித்து வருகிறார்கள்…

தங்கள் தயாரிப்புகளை விற்கவோ தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவோ… கேரள கடற்கரையோரம் உள்ள நகரங்களுக்கு சென்று வந்த லட்சத்தீவு வாசிகள்… இனிமேல்  கேரள கடற்கரையோரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று வர்த்தகம் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது…

அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்கலாபுரம்(மங்களூரு) நகரத்தில் மட்டுமே தங்களது உற்பத்திப் பொருள்களை விற்கவோ தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவோ செய்ய வேண்டுமென்று புதிய சட்ட விதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது….

அரசின் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வந்த ஏராளமான அரசு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்… குறிப்பாக வீட்டு வசதி வாரியத்தில் நூற்றுக் கணக்கான ஊழியர்கள் அடியோடு நீக்கப் பட்டுள்ளார்கள்…

சமீபகாலமாக காவல்துறையினர் பொதுமக்கள்  மீது பல்வேறு விதமான வழக்குகள் தாக்குதல்கள் போன்றவற்றை தொடுத்து, பொதுமக்களுடன் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கும் நிலை இருந்து வருகிறது…

பள்ளி மதிய உணவு திட்டத்தில் கடந்த காலங்களில் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டு வந்தது.

தற்போது மாட்டிறைச்சியை மதிய உணவு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது… தீவுக்குள் மாட்டிறைச்சியைத் தடை செய்வது பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்துவது போன்றவற்றை நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருகிறது…

சரி இத்தகைய செயல்களை செய்ய  சங் பரிவாரத்தினை தூண்டுகின்ற விஷயங்கள் என்னென்ன…? அவை இரண்டே இரண்டு தான்… ஒன்று தனது கார்ப்பரேட் பங்காளிகளை வாழ வைக்க வேண்டும் என்பது… இரண்டாவது பிரிவினைவாத திட்டங்களை நிறைவேற்றுவது…

முதலாவது நோக்கம் எவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாகும்… ஏனெனில் அந்த தீவு இயற்கையின் அருட்கொடையாகும்… சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வசீகரத் தன்மை கொண்டதாகும் பெரும் நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டை சுற்றுலாத்துறையில் அதிகமாக முதலீடு செய்ய பொருத்தமான ஒரு இடம் என்ற குறுகிய முதலாளித்துவ எண்ணம் தான் காரணம் என்று கொள்ளலாம்…

ஆனால் இரண்டாவது காரணம் மிக நுட்பமாக வகுப்புவாத, பிரிவினைவாத கொள்கைகளை பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கும்  நோக்கத்தில் நடத்தப்படும் அத்துமீறல்கள் ஆகும்…

அதற்கு சரியான காரணம் ஒன்றுள்ளது…அந்த தீவில் வசிக்கும் மக்களில் 90 சதவீதமும்  முஸ்லிம்கள் என்பது தான் சங்பரிவார் அமைப்புகளை இத்தகைய வேலையை செய்யத் தூண்டும் முக்கிய காரணி ஆகும்… முழுக்க முழுக்க அந்த தீவு பகுதியில் உள்ள அந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் வாழும் பகுதியான லட்சத் தீவிலிருந்து குடியுரிமை திருத்த மசோதாவைப் போன்ற மசோதாக்களை பயன்படுத்தி, அந்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை அந்த தீவுப் பகுதியை விட்டு விரட்டும் நோக்கத்தில், சங் பரிவார் ஆர் எஸ் எஸ் கும்பலால் செய்யப்படும் சதிதான் மேற்கண்ட அரசியல்ரீதியான அராஜகங்களுக்கான முக்கிய காரணம்….

பிரஃபுல் பட்டேல் நிர்வாக அதிகாரியாக இலட்சத்தீவுகளுக்குள் நுழைந்த பிறகு, நிர்வாக சீர்கேடுகள் மூலமாக கட்டுப்பாடற்ற முறையில் லட்சத்தீவு வந்து போகும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது…

கடந்த கோவிட்-19 முதலாம் அலை கால கட்டத்தில், நாட்டின் மற்ற பகுதிகள் போலவே மார்ச் 24- 2020 முதல் தான் சுற்றுலாப் பயணிகள் வருவது நிறுத்தப் பட்டது என்ற போதும் கூட, ஒரு நோயாளி கூட கண்டறியப் படவில்லை…ஆனால் தற்போது TPR விகிதம் 60% மேலாக இருந்து வருகிறது என்பது இன்னொரு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்…

ஒருவருக்கு பிடித்தமான தொழிலை செய்து அவர் விரும்பும் உணவை உண்டு நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இந்த நாட்டில் வாழும் உரிமையை லட்சத்தீவு மக்களுக்கு சங்பரிவார் தலைமை தாங்கும் மத்திய அரசு மறுத்து வருகிறது…

அந்தப் பகுதியில் வாழும் மக்களை தங்கள் சொந்த மண்ணில் வாழ விடாமல் செய்வதற்கு எதிராக நாடெங்கிலும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன…

காஷ்மீரில் செய்தது போன்று மக்கள் தங்கள் எதிர்ப்புகளைப் பொதுவெளிகளில் பேசவோ எழுதவோ தடை விதிக்கப் பட்டுள்ளது…

சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாதவாறு இணைய சேவைகளை துண்டித்து, இந்திய பொது சமூகத்திலிருந்து லட்சத் தீவை தனிமைப் படுத்தி வைத்துள்ளது…

லட்சத்தீவு மக்களின் அரசியல், பண்பாட்டு, வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்… ஆதரவுக் கரம் நீட்டுவோம்…

லட்சத்தீவு மக்களுக்காக குரல் கொடுப்போம்…

  – தீக்கதிர்