நடக்கிறது எல்லாமே ரங்கசாமிக்கு தெரியும்.. 3 எம்எல்ஏக்கள் நியமனம் கூட அவருக்கு தெரியும் என்று பாஜக தெரிவித்துள்ளது, புதுச்சேரி அரசையே மிரள வைத்து வருகிறது.

இந்த முறை புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி இரண்டும் சேர்ந்து 16 இடங்களை பிடித்தது.. அதன்படி என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

ஆனால், திடீரென அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்படவும் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறார்.. பதவியேற்ற உடனேயே தொற்று பாதிப்பு வந்துவிட்டதால், அமைச்சர்கள் யாரையும் அவர் நியமனம் செய்யவில்லை..

அதனால், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பதவிப்பிரமாணமும் எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில்தான், பாஜகவை சேர்ந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகிய 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய உள்துறை நியமனம் செய்து அறிவித்தது. இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது..

முதல்வர் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது, இப்படி ஒரு நியமனம் தேவையா? ரங்கசாமிக்கு தெரிவிக்கப்படாமலே இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது என்ற சலசலப்புகள் எழுந்தன..

எனவே, இந்த 4 நாட்களாகவே புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தியும் எழுந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

இந்த சம்பவம் அதற்கு மேலும் ரங்கசாமி ஆதரவாளர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. பின்னர் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்:

அப்போது அவர்கள், ‘புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குணமடைந்த பிறகே அமைச்சர்கள் பதவி ஏற்பு நடைபெறும்… ஆனால் நியமன எம்எல்ஏக்கள் நியமனம் குறித்து கூட்டணி கட்சிகளுக்கும் தெரியும்.. முதல்வர் ரங்கசாமிக்கும் தெரியும்.

சிகிச்சை முடிந்து ரங்கசாமி வந்த பிறகே அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவி ஏற்பு நடக்கும்…

இந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்… தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் போதிய பலம் இருக்கிறது. தங்களது தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையில், சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்… கூட்டணியில் ஒரு குழப்பமுமில்லை’ என்று கூட்டாக தெரிவித்தனர்.

ஆனால், என்ஆர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் N.S.J. ஜெயபால் இதை உடனடியாக மறுத்துள்ளார்.. இது சம்பந்தமாக ஒரு அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்:

அதில், ‘சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு மட்டுமே பேசி முடிவு செய்யப்பட்டது… நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் சம்பந்தமாக பங்கீடு கேட்டதற்கு, தேர்தலுக்குப் பிறகு டெல்லியில் பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்று உறுதி செய்யப்பட்டது.

அதனால், இப்போது நியமனம் செய்யபட்டிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று அதில் விளக்கம் தந்துள்ளார். ஆக, ரங்கசாமிக்கு எல்லாம் தெரியும் என்று பாஜக பகீர் தகவல் வெளியிட்டுள்ளது, மறுபடியும் புதுச்சேரி அரசியலில் குழப்பத்தை விளைவித்து வருகிறது.

புதுச்சேரியிலும் ஆட்டத்தை பாஜக ஆடத் தொடங்கிவிட்டது. புதுச்சேரி தேர்தலில் 6 இடங்களில்தான் பாஜக வென்றது.

அதன் கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வென்றது. இதனால் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

ஆனால் என்.ஆர். காங்கிரஸை இல்லாமல் ஆக்குவதற்காக முதல் கட்டமாக பாஜகவின் 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக்கி இருக்கிறது பாஜக. அதேபோல் சுயேட்சைகளில் 3 பேரை வளைத்துள்ளது

பாஜக. இப்போது புதுவையில்  தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக சித்துவிளையாட்டுகளால் உருமாறிக் கொண்டிருக்கிறது. என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏக்களை வளைக்கும் பேரத்தையும் பாஜக தொடங்கிவிட்டது.

போகிற போக்கில் புதுவையில் கோலோச்சிக் கொண்டிருந்த என்.ஆர். காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஒரே காரணத்தால் புதைகுழிக்குப் போவது தவிர்க்க முடியாதது என்கிற நிலைதான் உள்ளது.