தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவி ஏற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் நடைபெற்ற 16 வது சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடும் சட்டசபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி ஏற்க உள்ளனர்.

இந்நிலையில், புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படாததால், தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் கீழ்பென்னாத்தூர் உறுப்பினர் கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் கு.பிச்சாண்டிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்

சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை பதவி ஏற்றுக் கொள்கின்றனர். நாளை மறுநாள் (புதன்கிழமை) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்