30 தொகுதிகளைக்கொண்ட புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
புதுச்சேரி சட்டப்பேரவை
இதற்கான வாக்கு எண்ணிக்கை புதுச்சேரி மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், தாகூர் கலைக்கல்லூரியிலும் நடைபெற்றது.
அதேபோல காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களின் ஏழு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அந்ததந்தப் பகுதிகளில் நடைபெற்றது.
மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு 12:30 வரை நீடித்தது. 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்ற நிலையில், 5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்து இடத்திலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன.
கொல்லப்பள்ளி அசோக் – ரங்கசாமி
ஐந்தில் ஒரு பகுதி என்ற கணக்கில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பி.ஜே.பி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை வீழ்த்தி ஆறு சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தட்டாஞ்சாவடி தொகுதியில் 12,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ரங்கசாமியை, ஏனாம் தொகுதியில் 646 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார் சுயேச்சை வேட்பாளரான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ்அஷோக்

வெற்றிபெற்றவர்கள் விவரம்:
என்.ஆர்.காங்கிரஸ்:
1. தேனீ.ஜெயக்குமார் – மங்கலம்
2. கே.எஸ்.பி.ரமேஷ் – கதிர்காமம்
3. லட்சுமிகாந்தன் – ஏம்பலம்
4. ராஜவேலு – நெட்டப்பாக்கம்
5. தட்சிணாமூர்த்தி (எ) பாஸ்கர் – அரியாங்குப்பம்
6. ஏ.கே.டி.ஆறுமுகம் – இந்திரா நகர்
7. ரங்கசாமி – தட்டாஞ்சாவடி
8. சந்திரபிரியங்கா – நெடுங்காடு
9. பி.ஆர்.என்.திருமுருகன் – காரைக்கால் வடக்கு
10. லட்சுமி நாராயணன் – ராஜ்பவன்
பாஜக:
1. ஜான்குமார் – காமராஜ் நகர்
2. ரிச்சர்ட் ஜான்குமார் – நெல்லித் தோப்பு
3. நமச்சிவாயம் – மண்ணாடிப்பட்டு
4. கல்யாண சுந்தரம் – காலாப்பட்டு
5. ஏம்பலம் செல்வம் – மணவெளி
6. சாய் ஜெ.சரவணன் – ஊசுடு
காங்கிரஸ்:
1. வைத்தியநாதன் – லாஸ்பேட்
2. ரமேஷ் பரம்பத் – மாஹே
தி.மு.க:
1. அனிபால் கென்னடி – உப்பளம்
2. சிவா – வில்லியனூர்
3. நாஜிம் – காரைக்கால் தெற்கு
4. சம்பத் – முதலியார் பேட்டை
5. நாக தியாகராஜன் – நிரவி பட்டினம்.
6.செந்தில் – பாகூர்.
சுயேச்சை வெற்றியாளர்கள்:
1. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அஷோக் – ஏனாம்
2. நேரு – உருளையன்பேட்டை
3. பிரகாஷ் குமார் – முத்தியால்பேட்டை
4. அங்காளன் – திருபுவனை
5. சிவா – திருநள்ளாறு
6. சிவசங்கரன் – உழவர்கரை
