முதலமைச்சர் அறிவித்த ரூ.12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன் தள்ளுபடிக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்
பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் இதுபற்றி கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 50 சதவீதமாக இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு, உரிய நாளான ஜூன் 12 ஆம் தேதியன்றே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால், சாதனை அளவாக 4.12 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டது. போதுமான பாசன வசதிகள் கிடைத்ததாலும், உரிய நேரத்தில் விதைகள் மற்றும் பிற இடுபொருட்கள் வழங்கப்பட்டதாலும், விவசாயிகள் ஒரு நல்ல மகசூலை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், தொடர்ச்சியான இரண்டு புயல்களான நிவர் மற்றும் புரெவி மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழையின் காரணமாக அறுவடை நேரத்தில் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்து, அவர்களின் நம்பிக்கையை சிதைத்தது. முற்றிய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களின் காட்சிகள் இதயத்தை உருக்கின.
பயிர் சேதத்துக்கு நிவாரணம்
முதலமைச்சரும் ஒரு விவசாயியாக இருப்பதால், விவசாயிகளின் துயரத்தைப் புரிந்துகொண்டு, விவசாயிகளுக்கு உதவும் வகையில் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். பயிர்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணம், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 7,410 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், நெல் மற்றும் இதர இறைவைப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 13,500 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், பல்லாண்டுகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 18,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. முதலமைச்சர், நிவாரணம் பெறுவதற்கு உச்சவரம்பான 2 ஹெக்டேர் பரப்பளவு என்ற அளவுகோலையும் நீக்கிவிட்டார். இதன் விளைவாக, மாநிலம் முழுவதும் உள்ள 15.25 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, மொத்தம் 1,715 கோடி ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, முதலமைச்சர், விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இதனால், 16,43,347 விவசாயிகள் செலுத்த வேண்டிய மொத்தம் 12,110.74 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட, முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக, 2021?22ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிவாரண நடவடிக்கைகளுடன், மறுசீரமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு கணிசமான அளவில் கூடுதல் நிதிச்சுமையை ஏற்று வருகிறது. மத்திய அரசு தனது காப்பீட்டுக் கட்டண மானியத்தில் உச்ச வரம்பு நிர்ணயித்திருந்ததாலும், பல காப்பீட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்கத் தயங்கியதனாலும், பல மாநிலங்களில் இத்திட்டத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.
காப்பீட்டுக் கட்டண மானியம்
இருந்த போதிலும், தமிழ்நாடு அரசு காப்பீட்டுக் கட்டண மானியத்தை கூடுதல் சுமையாக ஏற்றுக்கொண்டு, 80:20 எனும் பகிர்மான அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய இணைக் காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு போதுமான இடர்க் காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020–21ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடான 747.15 கோடி ரூபாயை உயர்த்தி, 2020-21 ஆம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில் 812.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை மேலும் உயர்த்தி, 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,738.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரிதான நீர்வளங்களைப் பாதுகாக்க நுண்ணீர்ப் பாசனம் இன்றியமையாதது. எனவே, நுண்ணீர்ப் பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. 2011-12 ஆம் ஆண்டிலிருந்து, நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ், 4,060.12 கோடி ரூபாய் மொத்தச் செலவில், 19.26 இலட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டில், ஒரு சாதனையாக 1,200 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, 5 இலட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.
40 ஆயிரம் உழவர் குழுக்கள்
மாநிலத்திலுள்ள விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட, தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டு, மூன்றாண்டு காலத்தில் மேலும் 25 இலட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் இதன் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.
நடப்பு ஆண்டில் கோடை உழவு, மானிய விலையில் விதை விநியோகம், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் மதிப்புக் கூட்டும் மையங்களை நிறுவுதல் போன்ற பணிகள் மூலம் 7.5 இலட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து மீண்டு வருவதற்கு, 2017-18ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூட்டுப் பண்ணைய முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 8 இலட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒன்று சேர்ந்து, 40,000 உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் 8,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்துள்ளனர். மூலதன நிதியாக 300 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
மேலும், 25,228 வேளாண் இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த பண்ணைய முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதன் மூலம், நடப்பாண்டில் மேலும் 12,022 நில உடைமைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 2019-20 ஆம் ஆண்டில் பழங்கள் பயிரிடும் பரப்பளவு 7.17 இலட்சம் ஏக்கரிலிருந்து
7.86 லட்சம் ஏக்கராகவும், காய்கறிகள் பயிரிடும் பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கரிலிருந்து 9.24 இலட்சம் ஏக்கராகவும் அதிகரித்துள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக, தோட்டக்கலைப் பயிர்களை அதிகமாக சாகுபடி செய்யும் 10 மாவட்டங்களில் 482.36 கோடி ரூபாய் செலவில் விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் 102 கோடி ரூபாய் செலவில்,மேலும் 8 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
தொழிலாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கும், சாகுபடி செலவைக் குறைப்பதற்கும், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதுவரையில் 1,51,813 வேளாண் இயந்திரங்கள் 714.43 கோடி ரூபாய் மானிய உதவியுடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவுவதற்காக, 314.15 கோடி ரூபாய் மானியத்துடன் 3,416 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
விவசாயத் தலைவர்களின் சேவைகளை கௌரவப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ‘நெல் உற்பத்திக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது’ திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் உற்பத்தியில் சாதனை படைத்தவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. ‘பாரம்பரிய நெல் இரகங்களுக்கான நெல் ஜெயராமன் மையம்’, 47.87 லட்சம் ரூபாய் செலவில் நீடாமங்கலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
2020-21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடு 11,109.48 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வேளாண்மைத் துறைக்கு 11,982.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


