சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பீடு நடை போடுகிறது

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பீடு நடை போடுகிறது

முதலமைச்சர் அளித்த பல்வேறு சலுகைகளால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பீடு நடை போடுகிறது என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின் பெருமிதத்துடன் கூறினார்.

தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் பொன் விழா ஆண்டில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின் பேசியதாவது:–

புரட்சித்தலைவி அம்மா, மாநிலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான உந்து சக்தியாகவும் திகழ்ந்து வரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கும், தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்குமான பல்வேறு சீர்மிகு திட்டங்களையும், முன்னோடி முயற்சிகளையும் உருவாக்கி செயல்படுத்தினார்.

‘‘தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு முதன்மை மாநிலமாக உருவாக்குவதே தம்முடைய குறிக்கோள்” என அம்மா சூளுரைத்ததை நிறைவேற்றி, நல்ஆளுகைக்கான சிறந்த மாநிலம் என சாதனை படைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு தனிக்கவனம் செலுத்தி, சிறப்பானத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

புதிய திட்டங்கள்

முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில்,

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான பிரத்யேக சிங்கிள் விண்டோ போர்டல் உள்ளிட்ட தொழில் சூழலையும், தொழில் செய்வதில் எளிமைகளையும் (Ease of doing Business) மேம்படுத்துவதற்கான பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள்,

* மானியத் திட்டங்களின் கீழ் அதிகபட்ச மானியத் தொகை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது,

* தேவைக்கேற்ப மானியத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு,

* மானியத் திட்டங்களின் முழுமையான இணையம் வழியான செயல்பாடுகள்,

* 24 புதிய தொழிற்பேட்டைகள்,

* குறைந்த விலையிலான தொழில் மனைகள் மற்றும் வெளிப்படையான ஒதுக்கீட்டு முறைகள்,

* குழும அடிப்படையிலான பொது வசதி மையங்கள், பொது உற்பத்தி கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள்,

* பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்,

* புத்தாக்கம் எனப்படும் புதுமைகளை (innovation) ஊக்கப்படுத்துவதற்கான

புதிய ஸ்டார்ட் அப் அன்ட் இன்னோவேஷன் கொள்கை,

* 2010–-11ம் நிதி ஆண்டின் ஓதுக்கீட்டைப் போல் 5 மடங்கிற்கு மேல் நிதி ஒதுக்கீடு

உள்ளிட்ட முன்னோடி நடவடிக்கைகள் என அம்மாவின் அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கு செய்து வரும் பாராட்டத்தக்க பங்களிப்பின் வாயிலாக இன்று தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை, நாட்டின் முதன்மை நிலையில் இருந்து வருவதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

வளர்ச்சிப் பாதையில் பீடு நடை

அம்மாவின் வரலாற்று சிறப்புமிக்க தொலைநோக்கு மற்றும் அதனடிப்படையிலான நடவடிக்கைகள் மற்றும் அம்மாவின் நல்வழியில், முதலமைச்சரின் செயல்பாடுகளின் பயனாக, கடந்த 9 ஆண்டுகளில், 18 லட்சத்து 54 ஆயிரத்து 250 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் புதிய பதிவுகள், 2.73 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1 கோடியே 25 லட்சத்து 63 ஆயிரத்து 310 புதிய வேலைவாய்ப்புகள் என்ற சாதனை வளர்ச்சியை எட்டியுள்ளதையும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பீடுநடைபோட்டு வருவதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலமைச்சர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது உள்ளிட்ட இலக்குகளைக் கொண்ட புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021ஐ 16.2.2021 அன்று வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய தொழிற்கொள்கையின் மிக முக்கியமான சில சிறப்பம்சங்கள்:

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் போதிய நிதிக்கான அணுகலை விரிவாக்குவதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனத்துடன் வழங்கப்படும்.

மூலதன மானிய உச்சவரம்பு உயர்வு

* மூலதன மானியம், சிறப்பு மூலதன மானியம், வட்டி மானியம், பின்தங்கிய தொகுதிகள் மற்றும் வேளாண் தொழில்களுக்கான மானியம் மற்றும் பின்-முனை வட்டி மானியம் போன்ற சலுகைகள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

* குறு நிறுவனங்களுக்கான மூலதன மானிய உச்சவரம்பு 6.25 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

* சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மூலதன மானிய உச்சவரம்பு மூன்று தவணைகளில் 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

* ஆலை மற்றும் எந்திரங்களில் செய்யப்பட்ட முதலீட்டில் 10 விழுக்காடு மதிப்புக்கூட்டு வரிக்கு பதிலாக கூடுதல் மூலதன மானியம் 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

* பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கூடுதல் மூலதன மானியம் 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

* உந்துதல் துறை நிறுவனங்களுக்கான சிறப்பு மூலதன மானிய உச்சவரம்பு மூன்று தவணைகளில் 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை அளவிடுவதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மாற்று முதலீட்டு நிதி அமைக்கப்படுகிறது.

பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை வெளியிட்டுள்ள முதலமைச்சருக்கு இத்தருணத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொருளாதார முன்னேற்றம்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கில் மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கான விருது, சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதியாளருக்கான விருது மற்றும் மாநில அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய வகையில் சிறந்த முதல் மூன்று வங்கியாளர்களுக்கான விருது ஆகிய விருதுகளை நமது அரசு வழங்கி வருகிறது. 2016–-17 மற்றும் 2017–-18 ஆகிய இரு ஆண்டுகளுக்கான விருதுகள் பெற்ற நிறுவனங்களுக்கும் வங்கியாளர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் 1970–ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, ஒரு சேவை நிறுவனமாக செயல்பட்டு, தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்கப்படுத்துவதற்காக தொழிற்பேட்டைகளை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல்,

தொழில் நிறுவனங்களுக்கான மூலப்பொருட்கள் வழங்குதல் மற்றும் தொழில் முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துவதற்கான உதவிகள் செய்தல் போன்ற பணிகளை திறம்பட செய்து வருவதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றி வருகிறது.

தமிழ்நாடு சிட்கோவானது, 1970–ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை உருவாக்கிய 122 தொழிற்பேட்டைகளில் 9,470 தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுமார் 4 லட்சத்து 65 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.

முதன்மை மாநிலம்

மத்திய மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் குழும வளர்ச்சி திட்டத்தில் மொத்தம் 87 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதுடன், 50 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் சிட்கோ நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டங்களில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கின்றேன். இந்த விழாவில் சிட்கோ நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வலைதளத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாடு சிட்கோவின் 50 ஆண்டு கால பாரம்பரியம் நிறைந்த பெருமைமிக்க பயணத்தில் கடந்து வந்த பாதையின் மைல் கற்கள் சாதனைகளின் தரவுகளை உள்ளங்கை நெல்லிக்கனியென தரும் தகவல் களஞ்சியமான ‘காபி டேபிள்’ புத்தகம் மிகவும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறு சிறு தொழில் முனைவோர்களுக்கான குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ள ஓசூர் அச்சு மற்றும் அட்டைப்பெட்டி குழுமம், குன்னூர் கம்பளி ஆடை குழுமம் மற்றும் திருச்சி தங்க நகை குழுமம் ஆகிய குழுமங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மருந்தக புதிய கட்டிடம்

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணியினை பாராட்டி சான்றிதழ் மற்றும் பணி உயர்வு ஆணைகளை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், கிண்டி தொழிற்பேட்டையின் பணியாளர்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நவீன மருத்துவ உபகரணங்களுடன் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிட்கோவின் கிண்டி மருந்தக புதிய கட்டடத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலமைச்சர் எடப்பாடியாரால் 2019–ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி வைக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட இந்த குறுகிய காலத்தில் இதுவரையில் 20–க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பங்குபெற செய்து அவர்களின் தொழில் விரிவாக்கத்திற்கும் மற்றும் சந்தை படுத்துவதற்கும் உதவி புரிந்துள்ளது.

இந்த அமைப்பின் மூலம் இன்று இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவதின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி வாய்ப்பினை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.

மேலும் பிளிப்கார்ட் உடன் உண்டான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதின் மூலம் இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் கூட்டுறவு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை மின்வணிகம் மூலம் சந்தை படுத்துவதற்கு பெரிதும் உதவும்.

தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மாறிவரும் பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட எத்தகைய சவால்களையும், போட்டி சூழலையும் எதிர்கொள்ள ஏதுவான வகையிலும், தொடர்ந்து நீடித்த நிலையான வளர்ச்சிப்பாதையில் வெற்றி பெற ஏதுவான வகையிலும், உறுதியான நிலையில் உள்ளன.

இந்த நல்ல வேளையில், மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி வரும், பொன் விழா காணும் சிட்கோ நிறுவனம் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்