கல்விக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கும்படி இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி.விசுவநாதன் பிரதமர் மோடிக்கு கோரிக்கை
வைத்துள்ளார்.
இது சம்பந்தமாக இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பின் தலைவரும், விஐடி பல்கலைக்கழக நிறுவனர்- – வேந்தருமான ஜி. விசுவநாதன், பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த கோரிக்கை வருமாறு:–
2021–-2022 பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்விக்கு ஒதுக்கிய நிதி ரூ. 93,224 கோடி, கடந்த ஆண்டு 2020-–2021ல் கல்விக்கு ரூ.99,311 கோடி ஒதுக்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒதுக்கிய நிதி 6 சதவீதம் குறைந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் வாக்குறுதியளித்தபடி மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு சற்று அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கலாம் என கல்வியாளர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ரூ. 6,000 கோடி குறைந்துள்ளது. இது தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் இவ்வாறு நடைபெற்றது ஊக்கப்படுத்துவது போல் இல்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும் கூட சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டுதலுக்குரியதாகும்.
அதே நேரத்தில் கொரோனா காலகட்டத்தில் பள்ளிப்படிப்பை பல்வேறு காரணங்களால் பல மாணவ, மாணவிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இந்த நிலையை மாற்றி அனைவரும் கல்வி கற்க அதிகப்படியான நிதி ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது அறிவித்துள்ள பட்ஜெட்டின்படி தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு போதிய வழிவகை இல்லை. தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பள்ளி மற்றும் உயர் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும் மத்திய பள்ளிக் கல்வித்துறை 15வது நிதி ஆணையத்துக்கு அளித்துள்ள அறிக்கையின்படி 2021–-2025 (5 ஆண்டுக்கு) ரூ. 1.14 டிரில்லியன் தேவைப்படுகிறது.
இவ்வாறு கோ.விசுவநாதன் கூறியுள்ளார்.
