திருவாரூரில் அமைச்சர் இரா.காமராஜ் நலம்பெற வேண்டி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது.
அதிமுக திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டி அதிமுகவினரும், பொதுமக்களும் சிறப்பு வழிபாடு, முடிகாணிக்கை உள்ளிட்ட பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தவகையில் அதிமுகவின் திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமிற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தும் இரத்தம் வழங்கியும் முகாமினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு அதிமுகவின் திருவாரூர் நகர கழக செயலாளர் மூர்த்தி, திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் மணிகண்டன், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மண்டலத் தலைவர் ராஜராஜசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி மேற்கு ஒன்றியத்தலைவர் அஜித்குமார் முகாமினை ஒருங்கிணைத்து இரத்தம் வழங்கியவர்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கினார்.
மாவட்ட இணைச்செயலாளர் வினோத் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இரத்தம் தானமாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்டப் பேரவைச் செயலாளர் பொன் வாசுகிராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் நன்னிலம் குணசேகரன், மன்னார்குடி தமிழ்ச்செல்வன், நகர பேரவைச் செயலாளர் கலியபெருமாள், நன்னிலம் பேரூர் செயலாளர் பக்கிரிசாமி, கமலாம்பிகா கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ரயில் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் இரா.காமராஜ் உடல் நலம்பெற வேண்டி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் இரத்ததானம் வழங்கியது பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
