திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதியில், பள்ளிக் கல்வித் துறை மூலமாக 12 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 1978 மாணவ, மாணவிகளுக்கு ரூ.78.42 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட  ஆட்சியர்  சந்தீப்நந்தூரி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

அம்மாவின் அரசு கல்வி வளர்ச்சிக்காக பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, 2020–2021 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.34,181 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலமாக 2020– 2021 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு பயிலும் 22,688 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.00 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2020– -2021 கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு பயிலும் 3273 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.28 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவர் கனவினை நனவாக்கும் வகையில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, அதன் மூலம் 313 மாணவர்கள் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பிலும், 4 மாணவர்கள் பல்மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் த. சம்பத்து, நகர கழக செயலாளர் அசோக்குமார், ஆவின் துணை சேர்மன் பாரி பி. பாபு, ஆரணி ஒன்றிய கழக செயலாளர் பிஆர்ஜி. சேகர்  மேற்குஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.