104–வது பிறந்த நாள் விழா
தமிழகம் முழுவதும் கோலாகலம்
எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி – ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
அண்ணா தி.மு.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்கள்
சென்னை
எம்.ஜி.ஆரின் 104–வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் பாரதரத்னா எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இன்று அண்ணா தி.மு.க. நிறுவனர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104–வது பிறந்த நாள். இதனையொட்டி தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் அவரது பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.

ஆங்காங்கே எம்.ஜி.ஆரின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வணங்கினார்கள். எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 10 மணி அளவில் அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை கழகம் வந்தனர்.

அப்போது அங்கு பெருந்திரளாக கூடியிருந்த அண்ணா தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பியும், மலர் கொத்து வழங்கியும் உற்சாகமாக வரவேற்றார்கள்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
பின்னர் இருவரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு பெரிய ரோஜா மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதன் பின்னர் அண்ணா தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து  அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். சாக்லெட், லட்டு, சர்க்கரை பொங்கல் ஆகியவைகளும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான தமிழ்மகன் உசேன் 2 ஆயிரம் பேருக்கு சர்க்கரை பொங்கல் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வழங்கினார்கள்.
அண்ணா தி.மு.க. தலைமை கழகம் அருகே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி எம்.பி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா, என்.ஆர்.சிவபதி, வைகை செல்வன், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர்,
மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ., தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்

மியூசிக் அகாடமியில் இருந்து தலைமை கழகம் வரை வழிநெடுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
சாலையில் இருபக்கமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்து உற்சாகமாக வாழ்த்து கோஷம் எழுப்பினர்