அண்ணா தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுகிறது
சட்டமன்ற தேர்தலை சந்திக்க புதிய வியூகம்
சென்னை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அண்ணா தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை (9-ந்தேதி) காலை கூடுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று அண்ணா தி.மு.க. மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்க இந்த கூட்டத்தில் தலைவர்கள் புதிய வியூகம் வகுக்க இருக்கிறார்கள்.
வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம், கூட்டணியை இறுதி செய்ய கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ் எடப்பாடி ஆகியோருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்டவேண்டும் என்று விதி இருக்கிறது. அதன் அடிப்படையில், அண்ணா தி.மு.க. 2019 நவம்பர் 24 ந் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை நடத்தியது. அதன்பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி அண்ணா தி.மு.க. செயற்குழு கூட்டம் மட்டும் அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. அண்ணா தி.மு.க.வில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
இந்த சூழலில், அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 20 ந்தேதி நடைபெற்ற ஆலோசனையின்போது, ஜனவரி 9 ந்தேதி அண்ணா திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
மதுசூதனன் தலைமையில்…
அதன்படி அண்ணா தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை 9 ந்தேதி காலை 8.50 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இதற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் கோவிட் -19 பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழோடும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இதில் பங்கேற்க இருக்கும் உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அண்ணா தி.மு.க. வில் 300-க்கும்மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். இதுதவிர சிறப்பு அழைப்பாளர்கள் 1,500க்கும் மேற்பட்டவர்களும் வழக்கமாக வருவார்கள்.
சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை இறுதி செய்யவும், அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாராட்டி தீர்மானம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு கொண்டு வந்து, ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு, பொங்கல் பண்டிகையை கொண்டாட அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு, 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம், கொரோனா காலத்திலும் இந்தியாவிலேயே அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து சாதனை, இதுவரை இல்லாத அளவுக்கு 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை படைத்தது, துறைதோறும் சாதனைகள் படைத்து மத்திய அரசின் விருதுகளை அள்ளி குவித்தது என சாதனைகளை படைத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவை வரி தொகையை உடனே வழங்கவும், புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு கேட்ட நிதியை வழங்கும்படியும் தமிழக திட்டங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை
பொதுக்குழு கூட்டம் முடிந்த பின் நாளை மாலை அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆலோசனை நடத்துகிறார்கள்
