வேதாரண்யம் வண்டுவாஞ்சேரியில்
ரூ.1000 கோடியில் 250 ஏக்கரில் பிரம்மாண்ட உணவு பூங்கா:
ஆயக்கரன்புலம் கிராமத்தில் ரெடிமேட் ஜவுளிப் பூங்கா
நாகப்பட்டினம்:-
முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கொரோனோ வைரஸ் தடுப்பு பணிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அரசு அறிவித்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துகிறார்களா? என்று ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம். அந்த ஆய்வின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகிறார்கள்.
அரசு அறிவித்த வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிலுள்ளது. நேற்றையதினம் வரை, இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 2,191 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 1,384 நபர்கள், இறந்தவர்கள் 30 நபர்கள். 26.8.2020 அன்று மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 84 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 54 நபர்கள். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 707 நபர்கள். 26.8.2020 வரை நடைபெற்ற பரிசோதனைகள் 37,750.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு வீடாகச் சென்று சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.
அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நாகப்பட்டினம் மாவட்டம், ஒரத்தூர் கிராமத்தில் ரூ.366.85 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்மாவின் அரசுதான், ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தொடங்கியுள்ளது. சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட ரூபாய் 5.16 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அம்மாவின் அரசு இந்த மாவட்டத்தைத் தோற்றுவித்துள்ளது. தற்பொழுது கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இக்கூட்டம் முடிந்தவுடன் மயிலாடுதுறை மாவட்டம் தனியாக இயங்கும்.

ரூ.3,384 கோடியில் பாசன அமைப்பு சீரமைப்பு
நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவேரி உப வடிநிலப் பகுதிகளில் உள்ள பாசன அமைப்புகளை விரிவுபடுத்துதல், புனரமைத்தல் மற்றும் நவீனப் படுத்துதல் திட்டம் ரூபாய் 3,384 கோடி மதிப்பீட்டில் பரிசீலனையில் உள்ளது. இதனால் 4,67,345 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் – -குமாரமங்கலம் கிராமங்களுக்கிடையே ரூபாய் 494.84 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6,320 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். காவேரி கழிமுகப் பகுதியில் வெண்ணாறு உப வடிநிலத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் அரிச்சந்திரா நதி, அடப்பாறு, வெள்ளையாறு, பாண்டவையாறு, வளவனாறு, வேதாரண்யம் கால்வாய் மற்றும் 13 மின் நீர் இறவைத் திட்டப் பணிகளுக்கு ரூ.960.66 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.447.24 கோடி மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூபாய் 93.02 கோடி மதிப்பீட்டில், 20 பணிகள் துவங்கப்பட்டு 17 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.56.45 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சீர்காழி, திருநகரில், வெள்ளப்பள்ளம், உப்பலாற்றின் குறுக்கே ரூ.30.96 கோடி மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சீர்காழி- தர்மகுளம் கிராமத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 7.87 கோடி மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
ரூ.399 கோடியில் தடுப்பணை
நாகப்பட்டினம் மாவட்டம், செட்டிசேரி கிராமம், கடுவை ஆற்றின் குறுக்கே ரூபாய் 16.27 கோடி மதிப்பீட்டில் புதிய கடைமடை நீரொழுங்கி கட்டும் பணியும், சீர்காழி -மண்ணியாற்றில் கடல் நீர் உட்புகாத வண்ணம் திருவாலி ஏரியில் திருநகரி வாய்க்கால் சங்கமத்தின் கீழ் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் நீரொழுங்கி கட்டும் பணி துவங்கப்படவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் – மாதிரிவேளூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் – நலம்புதூர் கிராமங்களுக்கிடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.399 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் திட்டம் மற்றும் வேதாரண்யம், புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
சீர்காழி -தென்னாம்பட்டினம் கிராமத்தில் முல்லையாற்றின் குறுக்கே ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் ஒரு கடைமடை நீரொழுங்கி அமைக்கும் திட்டம், தரங்கம்பாடி வட்டம், காலமநல்லூர் கிராமத்தில் மஞ்சளாற்றின் குறுக்கே ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி அமைக்கும் திட்டம் ஆகியவை அரசின் பரிசீலனையில் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ள காவேரி டெல்டா உப வடிநிலப் பகுதிகளில் உள்ள நீர்வழிகள், தலைப்பு மதகுகள், படுகை அணைகள் தூர்வாருதல், நீர்க்குமிழி புனரமைத்தல், வடிகால் தூர்வாருதல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.
சீர்காழி, காவேரி டெல்டா உப வடிநிலத்தில் பெருந்தோட்டம் ஏரியில் உள்ள ஒரு நீரொழுங்கி, 6 மதகுகள், 1 வடிகால் மதகு புனரமைத்து நவீனப்படுத்தும் பணி முன்னேற்றத்தில் உள்ளது. தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், காவேரி டெல்டா உப வடிநிலத்தில் வீரசோழனாறு படுகை பகுதியில் 4 நீரொழுங்கிகள், 9 தலைப்பு மதகுகள் மற்றும் 1 படுகை அணை புனரமைத்து நவீனப்படுத்தும் பணி முன்னேற்றத்தில் உள்ளது.
மருத்துவ கல்லூரி
நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு இருக்கின்றன. நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணி ரூபாய் 23.12 கோடி மதிப்பீட்டில் முடியும் தருவாயில் உள்ளது. வண்டல் -அவரிக்காடு கிராமங்களுக்கிடையே நல்லாறு- அடப்பாறு -உப்பாற்றின் குறுக்கே ரூபாய் 11.35 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அது இம்மாத இறுதிக்குள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 385 குழாய் பாலங்கள் மழைநீர் மற்றும் பாசன நீர் எளிதாகச் செல்லும் வகையிலும் வெள்ள காலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறும் வகையிலும் கான்கிரீட் பெட்டி பாலங்களாக மாற்றிட ரூ.36 கோடி மதிப்பீட்டில் 385 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 314 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி சாலையில் ரயில்வே கடவு எண் 48-–க்கு பதிலாக நாகூர்- – நாகப்பட்டினம் ரெயில் நிலையங்களுக்கிடையே ரூ.48 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கும், மயிலாடுதுறை நகருக்கு ரூ.21.33 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கும் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருமுல்லைவாசல் – கீழமூவர்கரை சாலையில் உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி ரூபாய் 43.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. குமாரக்குடி – -வேப்பஞ்சேரி சாலையில் அம்மனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி ரூபாய் 11.79 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
டெல்டா மாவட்ட வேளாண் பெருமக்களின் கோரிக்கையை உணர்ந்து, காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் இயற்றி, டெல்டா பகுதியில் இருக்கின்ற வேளாண் பெருமக்களை பாதுகாக்கின்ற அரசு அம்மாவின் அரசு என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 5,56,758 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1,160 கோடியை அரசு பெற்றுத் தந்துள்ளது.
2016 – -2017–ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,38,812 விவசாயிகளுக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2017–ம் ஆண்டில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 26 கோடியே 92 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனத் திட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2020-–2021–-ல் இத்திட்டத்திற்கு 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
சீர்காழி, குற்றாலம் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், சந்தை உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 11 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பண்ணைப் பகுதியில் 958 விவசாயிகளுக்கு 958 வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியமாக ரூபாய் 11 கோடியே 68 லட்சத்து 83 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது.
வேளாண் ஆராய்ச்சி நிலையம்
வேதாரண்யம் -வண்டுவாஞ்சேரி கிராமத்தில் புதிதாக வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஒன்றைத் துவங்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலையில்லா கறவை பசு, விலையில்லா வெள்ளாடு, ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் போன்ற பல திட்டங்களை அம்மாவின் அரசு இந்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகையாக இந்த ஆண்டு ரூபாய் 5,000 வீதம் 19,826 குடும்பங்களுக்கு ரூபாய் 9.91 கோடி வழங்கப்பட்டுள்ளது.
50 சதவீத மானியத்தில், புதிய சூரை மீன்பிடி ஆழ்கடல் விசைப்படகு கட்டும் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 13 மீனவப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். வெள்ளப்பள்ளத்தில் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டிலும், தரங்கம்பாடியில் ரூபாய் 120 கோடி மதிப்பீட்டிலும் மீன்பிடி துறைமுக மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 2 மீன்பிடி துறைமுகங்களின் பணிகள் இந்த மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பூம்புகார் கடற்கரைப் பகுதிகளில் ரூபாய் 9.25 கோடி மதிப்பீட்டில் செயற்கை பவளப் பாறைகள் அமைக்கும் பணி 55 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.

உணவுப்பூங்கா
வேதாரண்யம், வண்டுவாஞ்சேரி கிராமத்தில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான உணவுப் பூங்கா அமைப்பதற்கு முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வேதாரண்யம், ஆயக்கரன்புலம் கிராமத்தில் தனியார் பங்களிப்பு மற்றும் மத்திய, மாநில அரசும் இணைந்து பிரம்மாண்ட ரெடிமேட் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, ரூபாய் 128 கோடி மதிப்பீட்டில் 20 ஏக்கர் பரப்பளவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதன்மூலம் முதற்கட்டமாக 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டம் படிப்படியாக 140 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்படவுள்ளது. இத்திட்டம் நிறைவடையும்போது 21 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுதான் மிகப்பெரிய தொழிலாக விளங்கும்.
கொரோனா வைரஸ் நோய்ப் பரவலுள்ள இந்தச் சூழ்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீட்பு நடவடிக்கையின் கீழ், மத்திய அரசின் சொத்துப் பிணையில்லா அவசரகாலக் கூடுதல் கடன் திட்டத்தின் கீழ் 7,401 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 57.25 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2019–ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் ரூபாய் 27,460 கோடி மதிப்பீட்டில் 2,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதத்தில் கோபுராஜபுரத்தில் சுத்திகரிப்பு விரிவாக்கம் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ரூ.2 ஆயிரம் கோடியில் தொழிற்சாலை
கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி அதானி சிட்டி கியாஸ் டிஸ்ரிபூஷன் நிறுவனம் ரூபாய் 2 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிட்டி கியாஸ் டிஸ்ரிபூஷன் திட்டம் செயல்படுத்தவுள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன, இதில் நாகப்பட்டினம் மாவட்டமும் அடங்கும்.
இந்த மாவட்டத்தில், கடந்த மூன்றாண்டுகளில் 9 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 7 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மீன்வளப் பல்கலைக்கழகமும், மீன்வளக் கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கூறியுள்ளார்
