தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக தாய் பால் வார விழாவை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட தாய் பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலுட்டும் தாய்மார்களுக்கான அறையை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
தமிழகத்தில் இந்த ஆண்டு முடிவதற்கு முன்பாக 7 மருத்துவ கல்லூரி மற்றும் 5 மாவட்ட மருத்துவமனை என 12 இடங்களில் தாய் பால் வங்கி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், செப்டம்பர் மாதம் மத்தியில் தமிழகத்தில் கொரனோ மூன்றாவது அலை உச்சம் தொட வாய்ப்பு இருப்பதாகவும் 42,000 வரை தினசரி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐஐடி கணிப்பு தெரிவித்த நிலையில் ஐஐடி, எய்ம்ஸ் உட்பட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
தமிழக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மாநில எல்லை பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என்றும், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப்பூசி இருப்பதாகவும் கூறினார்.
மேலும், உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்த அமைச்சர், இதுவரை 32 பேர் டெல்டா வகை வைரஸ் பாதிப்பாலும், 10 பேர் டெல்டா பிளஸ் வகையாலும் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் உடல்நிலை தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கொரனோ மூன்றாவது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு வார்டுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.தொடர்ந்து பேசுகையில்:
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுகின்றன என்று கூறினார்

