புதிய ஐ.டி.விதிகளை பின்பற்ற கால அவகாசம் வேண்டும் என இந்திய அரசிடம் டுவிட்டர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, சமூக ஊடகங்களுக்கான புதிய ஒழுங்கு விதிமுறைகளை பிப்ரவரி மாதம் அறிவித்தது. மேலும், இந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள சமூக ஊடகங்களுக்கு 3 மாத காலம் வழங்கப்பட்டது.
அதன்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆபாச படம் போன்ற சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்.
புதிய கட்டுப்பாடுகள்
மேலும், சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. அவ்வாறு, புதிய விதிகளை ஏற்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இந்த காலஅவகாசமானது கடந்த மே 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நீண்ட கருத்து வேறுப்பாட்டிற்கு புதிய விதிகளை ஏற்ற டுவிட்டர் நிறுவனத்திற்கு, அதன் குறைதீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், அரசின் தகவல் தொடர்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்றும் இந்திய அரசு தெரிவித்தது. மேலும், அவ்வாறு செயல்படாவிட்டால், விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்து டுவிட்டர் நிறுவனத்திற்கு அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனம், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய ஐ.டி விதிகளை பின்பற்றுவதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த புதிய விதிகள் குறித்து அரசிடம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
